தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே! - சீமான்

சென்னை மறைமலைநகரில் தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே! - சீமான்
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு,

அன்பு வணக்கம்!

இலங்கையை ஆளும் சிங்கள இனவாத ஆட்சியாளர்கள், இந்தியா உள்ளிட்ட உலக வல்லாதிக்க நாடுகளின் துணையோடு ஈழத்தாயகத்தில் நடத்திய இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை முடிவுற்று, 2 லட்சம் தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டு 17 ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். அப்பேரழிவிலிருந்து மீண்டு, இனம்பட்ட கொடுந்துயருக்கும், இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கும் பன்னாட்டுச்சமூகத்திடமும், அனைத்துலக நாடுகளிடமும் நீதிகேட்டு உலகெங்கும் வாழும் தமிழர்கள் இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

கோரிக்கை வைத்து மன்றாடுகிறோம். அரசியல் வழியாகவும், அறவழியாகவும், சட்டப்போராட்டங்கள் மூலமாகவும் நெருக்கடி கொடுத்து இனப்படுகொலை செய்திட்ட இலங்கை அரசின் மீது பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையையும், ஈழத் தாயக விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பையும் நடத்தக்கோரி உலகத்தமிழர்கள் பல்வேறு தளங்களில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இன்றளவும் எந்தவொரு தீர்வும் கிடைத்தபாடில்லை; பொதுவாக்கெடுப்புக்கான முன்னெடுப்புகளும் நடைபெறவில்லை.

ஏதும் செய்யவியலா கையறு நிலையில் தமிழர்கள் அதிகாரமின்றி உலகெங்கும் இருத்தப்பட்டிருக்கையில், புலமும், களமும், தமிழ்நாடும் வலிமையற்றுள்ள தற்காலத் துயர்மிகுச்சூழலில், தமிழர்கள் தங்களைத் தாங்களே உணர்வுச்சூடேற்றிக்கொண்டு, உள்ளத்தில் கொட்டிக்கிடக்கும் வன்மத்தை உரமேற்றிக்கொண்டு இன மீட்சிக்காக, தாயக விடுதலைக்காக மீண்டெழுந்து நிற்க வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுப் பெருங்கடமையாகிறது.

2009 ஆம் ஆண்டு மே-18 அன்று, தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழத்தாயகம் முழுவதும் ரத்தச்சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க இரண்டு லட்சம் தமிழர்களின் பிணக்குவியல்கள் நடுவில், முள்ளிவாய்க்கால் நிலத்தில் யாவும் முற்றுப்பெற்று விட்டதாக இன எதிரிகள் எக்காளமிட்டு சிரித்த நாள். எவ்விடத்தில் தமிழர்கள் முடிவுற்றதாக சிங்கள இனவாதமும், பன்னாட்டுச்சமூகமும் கருதியதோ அவ்விடத்திலேயே, ‘வீழ்வோம் என்று நினைத்தீரோ?’ என்று கேள்வி எழுப்பி, ‘விழ விழ எழுவோம்! ஒன்று விழ ஒன்பதாய் எழுவோம்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே!’ எனும் இன மீட்சி முழக்கத்தை முன் வைத்து தமிழ்த்தேசிய இனம் மீண்டெழுந்து தாயகக்கனவை சாத்தியப்படுத்த வேண்டியது காலக்கடமையாகிறது.

கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களிடம் மெல்ல மெல்ல அதிகரித்து வந்த தமிழின உணர்வை அழித்திடவும், தமிழ்த்தேசியப் பேரெழுச்சியை தடுத்திடவும் அடுத்தடுத்து திட்டமிட்ட அரசியல் சூழ்ச்சிகள் பல நடைபெறும் சமகாலச்சூழலில் அதனை முறியடித்து நாம் நம்முடைய ஒற்றுமையையும், பலத்தையும் உலகிற்கு உணர்த்த வேண்டியது பேரவசியமாகிறது. நம்முடைய பேரெழுச்சி மிகுந்த பெருந்திரளான ஒன்றுகூடல் மூலம், எத்தனை எத்தனை சதித்திட்டங்கள் தீட்டினாலும், பெருகிவரும் தமிழ்த்தேசிய இன உணர்வை எவராலும் தடுத்திட முடியாது என்பதை நிறுவுவோம்!

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடக்கிற அன்னைத் தமிழினத்தின் அடிமை விலங்கொடிக்க அணியமாக வேண்டிய வரலாற்று பெருந்தருணமிது. ஆகவே, தமிழர்கள் லட்சியவெறிக் கொண்ட வேங்கைகளாக எழுந்து பேரெழுச்சியோடு இனத்தின் விடியலுக்காகத் துணிந்து களமாட இந்நாளில் உறுதியேற்போம்.

இன்று 2026 ஆம் ஆண்டு மே 18 சென்னை மறைமலைநகரில் மாலை சரியாக 4 மணிக்கு நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கவுள்ள தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பேரெழுச்சியுடன் பங்கேற்க உலகத்தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன்!

ஈழப்போரின் இறுதி நாட்களில் உணவுக்கு மட்டுமல்லாது அதில் சேர்க்கும் உப்புக்கும் வழியில்லாது அல்லற்பட்டக் கொடிய வறுமை நிலையிலிருந்த காலக்கட்டத்தில், நம் உறவுகள் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சி, உப்பில்லா கஞ்சியையே உண்டு இனமீட்சிக்குப் போராடியிருக்கிறார்கள். அத்துயரினை நினைவுகூறும் வகையில் நினைவேந்தல் நிகழ்வின்போது, உணர்வுப் பேரெழுச்சியுடன் உப்பில்லா கஞ்சியை நாமும் உண்டு, இன விடுதலைக்களத்தில் கொல்லப்பட்ட நம்மின உறவுகளை நினைவுகூர்ந்து, அவர்கள் பட்ட பெருந்துயரினை உலகுக்கு உணர்த்திட மறைமலைநகரில் ஒன்றுகூடுவோம்!

உள்ளத்தில் அணையா பெருநெருப்பாய் பற்றியெரியும் இன உணர்வினை அடைகாத்து, அதனை மற்றவருக்கும் பற்ற வைத்து இன விடுதலையை வென்றெடுக்கச் சூளுரைப்போம்!.

இலக்கு ஒன்றுதான்; இனத்தின் விடுதலை!

இனம் ஒன்றாவோம்; இலக்கை வென்றாவோம்!

தமிழர்களின் தாகம்! தமிழீழத்தாயகம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com