

சென்னை,
காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- அண்ணன் தயாநிதி மாறன் உண்மை என்னவென்று தெரியாமல் அல்லது தெரிந்தே திரித்துப் பேசுவது அரசியல் தர்மம் அல்ல.
தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி முன்வைத்தது பாஜகவின் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை அல்ல! "வளர்ச்சி அடைந்த, குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இழக்கக் கூடாது" என்பதற்காக மாநிலத்தின் பொருளாதாரப் பங்களிப்பு மற்றும் வளர்ச்சியையும் 50:50 கணக்கில் கொள்ள வேண்டும் என்ற கலப்பினம் மாடலைத்’ தான் வலியுறுத்தினார். இது தென்னிந்திய மாநிலங்களின் உரிமையைப் பாதுகாக்கும் குரல்!
https://x.com/the_hindu/status/2043882148588106152?s=42
ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் வஞ்சித்து, வடமாநிலங்களுக்கு சாதகமாக பாஜக கொண்டுவர துடிக்கும் மக்கள்தொகை அடிப்படையிலான ஒருதலைப்பட்ச தொகுதி மறுவரையறையை தான் நாங்கள் "தென்னிந்தியாவிற்கு இழைக்கப்படும் துரோகம்" என்று எதிர்க்கிறோம்.
தெலங்கானாவாக இருந்தாலும் சரி, தமிழ்நாடாக இருந்தாலும் சரி — குடும்ப கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திய தென்னக மாநிலங்கள் ஒருபோதும் தண்டிக்கப்படக்கூடாது என்பதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.
அரசியல் லாபத்திற்காக அரைகுறை தகவல்களை பரப்பி அற்ப அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தென்னக மாநிலங்களின் உரிமைகளுக்காகவும், தமிழ்நாட்டின் குரலாகவும் ஒட்டுமொத்தமாக இணைந்து பாஜகவின் சதியை வீழ்த்த வரமாட்டேன் என்று முடிவெடுத்து விட்டீர்களா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.