

சென்னை,
சென்னை தியாகராயநகர் திலக் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சுஜாதா (60 வயது) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் வெங்கடேசுவர ராவ். சுஜாதா தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த வாரம் சுஜாதா வீட்டை பூட்டி விட்டு, வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்டார். அவரது கணவரும் வெளியூர் சென்றிருந்தார்.
சுஜாதாவின் கணவர் வெளியூரில் இருந்து வீடு திரும்பியபோது, அவருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அலங்கோலமாக பொருட்கள் சிதறிக்கிடந்தன.
பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து வீட்டின் பூட்டை உடைத்து பெரிய அளவில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சுஜாதா, பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரில், தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த 1 கிலோ எடையுள்ள தங்க, வைர நகைகளும், வெள்ளிப்பொருட்களும் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்திருந்தார். நகைகள் அனைத்தும் தனது குடும்பத்திற்கு சொந்தமான மிகவும் பழமையான நகைகள் என்றும் சுஜாதா புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது கொள்ளையன் யார்? என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கொள்ளையன் பெயர் பிரபாகரன் (50 வயது). இவர் மீது ஏற்கனவே கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபாகரன் திருடிய 1 கிலோ தங்க, வைர நகைகளுடன் எங்கு தப்பிசென்றார் என்பது குறித்து போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவரது மனைவி சுமதியும் (47 வயது), கொள்ளையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. சுமதியை அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரத்தில் வைத்து போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து சுமார் 100 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். ஏராளமான வெள்ளி பொருட்களும் கைப்பற்றப்பட்டது.
கைதான சுமதி போலீஸ் விசாரணையில் கூறும்போது, எனது கணவர் திருடிய நகைகளை என்னிடம்தான் கொடுத்து வைப்பார். அவர் தப்பி சென்று தலைமறைவாகிவிடுவார். பின்னர் போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பார்கள். அவரை நான்தான் வக்கீல் மூலம் ஜாமீனில் வெளியே கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.
சுமதியிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகள் போக, மேலும் ஏராளமான நகைகளை பிரபாகரன் தன்னுடன் எடுத்து சென்றுவிட்டது தெரியவந்துள்ளது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.