திருப்பூரில் பட்டப்பகலில் பயங்கரம்: கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை- சிறுவனிடம் போலீசார் விசாரணை

திருப்பூரில் கல்லூரி மாணவரிடம், பிளஸ்-2 மாணவன் செல்போன் வாங்கியது தொடர்பான தகராறில், கல்லூரி மாணவரை பிளஸ்-2 மாணவன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலையான கல்லூரி மாணவர் ஸ்ரீஹரி
Published on: 

திருப்பூர்,

திருப்பூரில் பட்டப்பகலில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒரு பிளஸ்-2 மாணவனை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவர்

திருப்பூர் ஏ.பி.டி. ரோடு இந்திராநகர் புளியமரத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 52). இவர் திருப்பூரில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மகன் ஸ்ரீஹரி (வயது 19). இவர் அவினாசிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரி மாணவரை வெளியே அழைத்துச் சென்ற சிறுவன்

ஸ்ரீஹரிக்கு தாய் இல்லாததால், தனது பாட்டி பழனியம்மாளின்(70) பராமரிப்பில் வளர்ந்தார். நேற்று மதியம் ஸ்ரீஹரியும், பழனியம்மாளும் வீட்டில் இருந்தனர். அப்போது மதியம் 16 வயது சிறுவன் ஒருவன் ஸ்ரீஹரியை தேடி அவருடைய வீட்டுக்கு வந்தான். ஸ்ரீஹரியை பார்த்ததும், தனியாக பேச வேண்டும் என்று கூறி வீட்டில் இருந்து வெளியே அவரை அழைத்துச்சென்றான்.

வெட்டிக்கொலை

பின்னர் சிறிது நேரத்தில் வீட்டுக்கு அருகில் நடுரோட்டில் ஸ்ரீஹரியின் அலறல் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தபோது ஸ்ரீஹரியின் தலை, கழுத்து, கை, கால்கள் என சரமாரியாக வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரீஹரி பரிதாபமாக இறந்தார். போலீஸ் விசாரணையில் ஸ்ரீஹரியை கொலை செய்தது தென்னம்பாளையத்தை சேர்ந்த 16 வயதான பிளஸ்-2 மாணவன் என்பது தெரியவந்தது.

செல்போன் தகராறு

இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீஹரியிடம் இருந்து விலைக்கு ஒரு செல்போனை சிறுவன் வாங்கியுள்ளான். அந்த செல்போன் சரிவர வேலை செய்யவில்லை என்று கூறி, செல்போனை ஸ்ரீஹரியிடம் கொடுத்து பணத்தை திருப்பிக்கொடுக்குமாறு கூறினான். அதற்கு ஸ்ரீஹரி மறுத்து விட்டதாக தெரிகிறது. இதில் கோபம் அடைந்த சிறுவன், ஸ்ரீஹரியின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக கத்தியால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com