பாலசமுத்திரத்தில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

பாலசமுத்திரத்தில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பாலசமுத்திரத்தில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
Published on

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் மந்தைக்குளம் உள்ளது. இந்த குளத்துக்கு அய்யம்புள்ளி குளத்தில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த குளத்தின் பாசனம் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் பாலசமுத்திரம் ஊரின் அருகே குளம் உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீருக்கும் ஆதாரமாகவும் திகழ்கிறது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் மந்தைக்குளம் நிரம்பியது.

இந்தநிலையில் பழனி சுற்றுவட்டார பகுதியில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. அதேபோல் பாலசமுத்திரம் மந்தைக்குளத்திலும் தண்ணீர் வற்றி வருகிறது. இதற்கிடையே குளத்தின் தெற்கு பகுதியில் நேற்று மீன்கள் செத்து மிதந்தன. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தண்ணீர் வற்றியதால் மீன்கள் செத்ததா அல்லது கழிவுநீர் கலப்பதால் இறந்ததா என சந்தேகம் உள்ளதாகவும், இதுகுறித்து அதிகாரிகள் குளத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, வெயில் காரணமாக குளத்தில் தண்ணீர் வற்றி வருவதால் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் மீன்கள் இறந்திருக்கலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com