அப்பிநாய்க்கன்பட்டி ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

ஊத்தங்கரை அருகே அப்பிநாய்க்கன்பட்டி ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்பிநாய்க்கன்பட்டி ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
Published on

ஊத்தங்கரை

செத்து மிதந்த மீன்கள்

ஊத்தங்கரை அருகே அப்பிநாய்க்கன்பட்டியில் உள்ள அழகன் ஏரி 15 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து சீராக இருந்து வந்தது. இதனால் ஏரியில் மீன்கள் அதிகளவில் இருந்தன. இதை பொதுமக்கள் பிடித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏரியில் உள்ள மீன்கள் மற்றும் பாம்புகள் செத்து மிதந்தன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் போலீஸ் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஊத்தங்கரை போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

வலியுறுத்தல்

அப்போது பொதுமக்கள் கூறுகையில், இப்பகுதி பொதுமக்கள் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழில் செய்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் ஆடு, மாடு வளர்ப்பதையே முக்கிய தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இவற்றை தினமும் ஏரியில் மேய்ச்சலுக்கு விடுகின்றனர். மதியம் கால்நடைகள் ஏரியில் தண்ணீர் குடிக்கின்றன. இந்த ஏரியில் மர்ம நபர்கள் விஷம் கலந்து இருக்கலாம்.

இதன் காரணமாக தான் மீன்கள், பாம்புகள் செத்து மிதக்கின்றன. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். ஏரியில் விஷம் கலந்த மர்ம நபர்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். ஏரியில் மீன்கள், பாம்புகள் செத்து மிதந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com