ஏரியில் செத்து கிடக்கும் பன்றிகள்

ஏரியில் செத்து கிடக்கும் பன்றிகளால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏரியில் செத்து கிடக்கும் பன்றிகள்
Published on

தா.பழூர்:

வண்ணான் ஏரி

அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் ஊராட்சியும், சிந்தாமணி ஊராட்சியும் ஒன்றாக இணையும் இடத்தில் வண்ணான் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மண்டிக்கிடக்கும் புதர்களை அகற்றி ஏரியை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தா.பழூர் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் 14 ஏக்கர் நிலப்பரப்பிலும், சிந்தாமணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 4 ஏக்கர் நிலப்பரப்பிலும் இந்த ஏரி அமைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஏரியின் மையப்பகுதியில் புதர் மண்டி கிடக்கும் இடத்தையொட்டி வானில் கழுகுகளும், பறவைகளும் வட்டமிட்டன. ஏதாவது சிறு உயிரினங்கள் இறந்து கிடந்திருக்கலாம் என்றும், அதனால் பறவைகள் வட்டமிடுகின்றன என்றும், அதை பார்த்தவர்கள் நினைத்தனர்.

செத்துக்கிடந்த பன்றிகள்

இந்நிலையில் அப்பகுதியில் இருந்து அதிக துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இதனை அடுத்து ஏரியின் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்கள் சிலர், துர்நாற்றம் வீசும் பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது ஏரியின் சிந்தாமணி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குவியல் குவியலாக பன்றிகள் இறந்து கிடப்பது தெரியவந்தது. இறந்த நிலையில் சுமார் 20 முதல் 25 பன்றிகள் வரை அந்த இடத்தில் தனித்தனியாக வீசப்பட்டுள்ளது.

நோய் வாய்ப்பட்டு இறந்த பன்றிகளை யாரோ சிலர் அங்கு தூக்கி வீசி சென்று இருக்கலாம் என்று அதனைப் பார்த்தவர்கள் தெரிவித்தனர். பன்றியின் உடல் அழுகிய நிலையில் சுற்றுப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

வேண்டுகோள்

தா.பழூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி பன்றி வளர்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஒரு இடத்தில் அடைத்து வைத்து வளர்க்காமல் கண்ட இடங்களில் பன்றிகளை மேய விடுவதால் பல்வேறு நோய்கள் பரவுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இறந்த பன்றிகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தாமல் அலட்சியமாக ஏரியின் நடுவில் தூக்கி வீசி சென்றவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு இடையூறாக பன்றிகளை வளர்ப்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com