

சென்னை,
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நவீன சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.277 கோடியில் 5 லட்சத்து 32 ஆயிரத்து 388 சைக்கிள்களை கொள்முதல் செய்வதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை டெண்டர் வெளியிட்டிருந்தது.
இந்த டெண்டரில் பங்கேற்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 28-ந் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், டெண்டர் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 13-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 75,000 மிதிவண்டிகளை விற்பனை செய்திருக்க வேண்டும், 75 வணிக வரி ரசீதுகளை சமர்ப்பித்திருக்க வேண்டுமென்ற நிபந்தனை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
இரண்டு பிரிவுகளுக்கும் சேர்த்து டெண்டர் கோருவோருக்கு ஆண்டுக்கு 10 லட்சம் மிதிவண்டிகள் உற்பத்தித் திறனும், ஒரே ஒரு பிரிவுக்கு மட்டும் விண்ணப்பிப்போருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் மிதிவண்டிகள் உற்பத்தித் திறனும் இருக்க வேண்டும் எனத் தளர்த்தப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு LILAC MIST நிறத்திலும், மாணவர்களுக்கு ARMY GREEN நிறத்திலும் மிதிவண்டி வழங்க வேண்டுமென டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழங்கப்படம் ஹெல்மெட்களுக்கு NABL/BIS அங்கீகாரம் பெற்ற ஆய்வகச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சைக்கிள் உற்பத்தி நிறுவனங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். கொள்முதல் ஆணை பெறப்பட்ட 150 நாட்களுக்குள் சைக்கிள் மற்றும் உபகரணங்கள் முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்று டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெண்டரில் தேர்வாகும் நிறுவனம் அரசின் ஆணையை பெற்ற பின்னர், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும் என தெரிகிறது.