

சென்னை,
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பால் உற்பத்தி பால் பண்ணை மேம்பாடு துறையின் ஆணையாளர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குனராகவும் இருந்த சுனில் பாலிவால், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் சி.காமராஜ், பால் உற்பத்திபால் பண்ணை மேம்பாடு துறையின் ஆணையாளர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உப்புக்கழகம்
தமிழ்நாடு உப்புக்கழகத்தின் மேலாண்மை இயக்குனர் டி.உதயச்சந்திரன், பள்ளிக்கல்வித் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம்.வள்ளலார், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
எரிசக்தித்துறை
சிறுபான்மையினர் நலத்துறை ஆணையாளர் தயானந்த் கட்டாரியா, போக்குவரத்து துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில் துறை முதன்மை செயலாளர் விக்ரம் கபூர், எரிசக்தி துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தொழில்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முழு கூடுதல் பொறுப்பையும் அதுல்ய மிஸ்ரா கவனிப்பார்.
சுற்றுலா வளர்ச்சி கழகம்
பொது மற்றும் மறுவாழ்வு துறையின் சிறப்பு செயலாளர் வி.பழனிகுமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுதீன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை, காஞ்சீபுரத்துக்கு புதிய கலெக்டர்
சென்னை மாநகராட்சியின் துணை ஆணையாளர் வி.அன்புசெல்வன், சென்னை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட கலெக்டராக இருந்த பி.மகேஸ்வரி, வணிக வரிகள் துறையின் இணை ஆணையாளராக( நிர்வாகப் பிரிவு) நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டை துணைக் கலெக்டர் பி.பொன்னையா, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளி கல்வித்துறை செயலாளர்
பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் டி.சபீதா, தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் வளர்ச்சிசெய்தித் துறை செயலாளர் ஆர்.வெங்கடேசன், தமிழ்நாடு கனிம வள மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
போக்குவரத்துத் துறை ஆணையராக இருந்த சத்ய பிரதா சாகு, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாத் துறையின் ஆணையரும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராகவும் இருந்த ஹர்சகாய் மீனா, தமிழ்நாடு உப்புக் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்.கஜலட்சுமி, சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக (வருவாய் மற்றும் நிதி) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.