

தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர், கடந்த 2ஆம் தேதி தேவாரத்திலிருந்து ஏலக்காய் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு உசிலம்பட்டி – மதுரை சாலையில் லாரியில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாலாந்தூர் அருகே லாரியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் ஏலக்காய் 60 மூட்டைகள் தீக்கிரையானதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் வாலாந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், கடந்த 13 ஆம் தேதி பாலகிருஷ்ணனை விசாரணைக்காக செக்கானூரணி காவல் நிலையத்திற்குக் காவல் ஆய்வாளர் முத்து அழைத்துச் சென்றுள்ளார். அதன்படி இரவு முழுவதும் விசாரணை நடைபெற்ற நிலையில், பாலகிருஷ்ணனைக் காவல் நிலையத்திலேயே அமர வைத்துவிட்டு, புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளக் காவல் ஆய்வாளர் முத்து மற்றொரு காவலருடன் வெளியே சென்றுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் பெண் காவலர் கலைச்செல்வி மற்றும் தலைமைக்காவலர் பழனிவேல் ராஜன் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், கழிவறைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற பாலகிருஷ்ணன், காவல் நிலையக் கழிவறையில் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பாலகிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் நிலையத்தில் விசாரணைக்காக சென்றவர் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காவல் நிலைய மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கும் மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.
இதற்கிடையே, பாலகிருஷ்ணன் உடலின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் பாலகிருஷ்ணனின் உடலில் 5 இடங்களில் காயம் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இடது தோள்பட்டை, வலது நெற்றி, விரல்கள், கழுத்து, வயிறு என 5 இடங்களில் காயம் உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசயான ஆய்வுக்கு உடல் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன்பிறகே இறப்புக்கான காரணம் தெரியும் என்று கூறப்படுகிறது.