திருச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுவன் உயிரிழப்பு-அண்ணாமலை கண்டனம்

திமுக ஆட்சியில், தமிழகம் அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
திருச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  சிறுவன் உயிரிழப்பு-அண்ணாமலை கண்டனம்
Published on

திருச்சி,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது.

கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெற்றோர்கள், கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாமல், முதல் உதவி கூட கிடைக்காமல், சிறுவன் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

நாட்டிற்கே மருத்துவத் தலைநகரமாக விளங்கிய தமிழகம், கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில், அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

அரசுப் பணி நியமனம், பணி மாற்றம் என ஒவ்வொரு துறையிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றவே அரசுப் பணிகள் என்பதை விட்டுவிட்டு, அரசுப் பணி நியமனங்களில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்ற போக்கில் திமுக அமைச்சர்கள் செயல்படுவதன் விளைவு, சுகாதாரத் துறையில் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகள். கடந்த 5 ஆண்டுகளில், தாங்கள் பணம் சம்பாதிக்க, தமிழக சுகாதார கட்டமைப்பையே சீரழித்திருக்கிறது திமுக அரசு.

உயிரிழந்த சிறுவன் பிரஜன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும், அரசு மருத்துவமனைகளில், 24 மணி நேரமும் மருத்துவ சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com