

மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீயோன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் (வயது 37), அழகர் (36). நண்பர்களான இருவரையும் சில நாட்களுக்கு முன்பு மானாமதுரை சீயோன் நகரில் 3 பேர் ஆயுதங்களால் வெட்டினர். இதுதொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷ் என்ற டெலிசன் (24) உள்பட 2 பேரை கைது செய்தனர். இதில் ஆகாஷ் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றதாகவும், இதற்காக பாலத்தில் இருந்து குதித்த போது அவரது கால் எலும்பு முறிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அவரை, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர், திடீரென உயிரிழந்தார். இதைதொடர்ந்து ஆகாசின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மானாமதுரை நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆகாஷ் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், அவரது சாவுக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கிடையே, மதுரை அரசு மருத்துவமனையிலும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விசாரணை கைதியாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது ஆகாஷ் திடீரென இறந்ததால், மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார்.
பின்னர் மதுரை அரசு மருத்துவமனை போலீசார், போலீஸ் விசாரணையில் இருந்த கைதி இறத்தல் என்ற 196 பி.என்.எஸ்.எஸ். பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து. ஆகாஷ் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்து, தமிழக டி.ஜி.பி. வெங்கட்ராமன் உத்தரவிட்டார். அதன்படி, அரசு மருத்துவமனையில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள், மதுரை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கி உள்ளது.
இந்நிலையில் மானாமதுரையில் விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்ததைக்கண்டித்தும், இளைஞரை தாக்கிய போலீசாரை கைதுசெய்ய வலியுறுத்தியும் மதுரை - ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் உறவினர்கள் 3-வது நாளாக இன்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பள்ளி, கல்லூரி வாகனங்களை அனுமதித்த நிலையில் இன்று அனுமதி மறுக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் அருகிலுள்ள இரண்டு தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.