சீர்திருத்த பள்ளியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம்: விசாரணையில் கொலை செய்யப்பட்டது அம்பலம் - காவலர்கள் 6 பேர் கைது

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சீர்திருத்த பள்ளியில் சிறுவன் உயிரிழந்த விவகாரம்: விசாரணையில் கொலை செய்யப்பட்டது அம்பலம் - காவலர்கள் 6 பேர் கைது
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் கடந்த மாதம் தாம்பரம் ரெயில்வே குடியிருப்பில் ரெயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரி ஒன்றை திருடியதாக கூறி ரெயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 29-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவனை செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை அடுத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்ட சிறுவன் கடந்த 31-ந் தேதி திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்தான். கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் உயிரிழந்ததாக சிறுவர் சீர்திருத்த பள்ளி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மகனின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

இது தொடர்பாக செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அங்கிருந்த காவலர் ஆனஸ்ட்ராஜ் என்பவர் சிறுவனை தாக்கியுள்ளார். அப்போது சிறுவன் அவரது கையை கடித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்குள்ள காவலர்கள் ஆனஸ்ட் ராஜ், சரண்ராஜ், விஜயகுமார், வித்யாசாகர், மோகன் மற்றும் சந்திரபாபு ஆகிய ஆறு பேர் சேர்ந்து சிறுவனை தாக்கியுள்ளனர்.

இதன் காரணமாக சிறுவன் உயிரிழந்துள்ளான். இது தொடர்பாக செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்கண்ட ஆறு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com