நிறைமாத கர்ப்பிணி பலி: மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு

ரூ.20 ஆயிரம் பெற்றுக் கொண்டு கணவன், மனைவி இருவரும் மரக்கிடங்கில் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வந்தனர்.
நிறைமாத கர்ப்பிணி பலி: மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு
Published on

காஞ்சீபுரம்,

நிறைமாத கர்ப்பிணி பெண் பலியான சம்பவத்தில், அதற்கு காரணமான மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.20 ஆயிரம் கடன்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40). இவரது மனைவி தேன்மொழி (வயது 35). இவர்கள் காஞ்சீபுரம் அருகே உள்ள வெள்ளை கேட் பகுதியில் ஆறுமுகம் என்பவரிடம் கடனாக ரூ.20 ஆயிரம் பெற்றுக் கொண்டு அவரது மரக்கிடங்கில் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வந்தனர். தேன்மொழி 9 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பிரசவ வலி ஏற்பட்டது.

உயிரிழப்பு

தங்கி இருந்த இடத்திலேயே பிரசவம் ஆனநிலையில் எதிர்பாராத விதமாக ரத்தப்போக்கு அதிகமானதால் தேன்மொழியும், பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேன்மொழி மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் அறிந்து வந்த உறவினர்கள், மரக்கிடங்கு உரிமையாளர் ஆறுமுகம் வாங்கிய கடனை காரணம் காட்டி தேன்மொழியையும் அவரது கணவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்து பொன்னேரிகரை போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார் மரக்கடை உரிமையாளர் ஆறுமுகத்திடமும், உயிரிழந்த தேன்மொழியின் கணவர் ஆனந்தனிடமும் விசாரித்தனர்.

கொத்தடிமைகளாக

போலீஸ் விசாரணையில் ஆனந்தன், மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது மரக்கடை உரிமையாளரை தனது செல்போன் மூலம் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றதாகவும், அவர் எடுக்காத நிலையில் நீண்ட நேரம் கழித்து அங்கு வந்த பின்னர்தான் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

வழக்குப்பதிவு

மேலும் ஆனந்தன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து, தானும் தனது குடும்பத்தினரும் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்ததாக தனியாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிப்பதற்காக, புகார் சப்-கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், போலீஸ் விசாரணை மற்றும் சப்-கலெக்டரின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்ல அனுமதி மறுத்த நிலையில் தாய், குழந்தை உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான மர வியாபாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com