

நெல்லை மாநகரம், மேலப்பாளையம் பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு ஆனந்தசேகர் என்பவர், 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு ஆனந்தசேகரை கைது செய்தனர்.
புலன் விசாரணையில் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நீதிபதி சுரேஷ்குமார், குற்றவாளி ஆனந்தசேகருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, தூக்குத்தண்டனை விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளுக்கு தலா 7 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இதனை தொடர்ந்து போக்சோ வழக்கில் சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை பெற்று தந்த போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ் (பாளையம்கோட்டை சரகம்), போலீஸ் இன்ஸ்பெக்டர் நாககுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரேணுகா, ஜெயந்தி, சிலுவைராணி, தலைமை காவலர் மெர்லின்குளோரி ஆகியோரை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், நேரில் அழைத்து சிறப்பாக பணிபுரிந்தமைக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.