

சென்னை,
தமிழகத்தில் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 1,506 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 496 ஆண்கள், 354 பெண்கள் என மொத்தம் 850 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 129 பேரும், கோவையில் 96 பேரும், செங்கல்பட்டில் 76 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக தேனி, ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் தலா இருவரும், தென்காசியில் ஒருவரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 12 வயதுக்குட்பட்ட 62 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 131 முதியவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
6 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 10 லட்சத்து 6 ஆயிரத்து 776 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 15 லட்சத்து 81 ஆயிரத்து 134 ஆண்களும், 11 லட்சத்து 27 ஆயிரத்து 908 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேர் உள்பட 27 லட்சத்து 9 ஆயிரத்து 80 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 2 ஆயிரத்து 646 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 91 ஆயிரத்து 936 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் இருவரும், தனியார் ஆஸ்பத்திரியில் 4 பேரும் என 6 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கோவையில் இருவரும், ஈரோடு, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூரில் தலா ஒருவரும் என 5 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 36 ஆயிரத்து 220 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
958 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் நேற்று 41 ஆயிரத்து 168 ஆக்சிஜன் படுக்கைகள், 26 ஆயிரத்து 119 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 8 ஆயிரத்து 308 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 75 ஆயிரத்து 595 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 958 பேர் நேற்று டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 134 பேரும், கோவையில் 112 பேரும், செங்கல்பட்டில் 87 பேரும் அடங்குவர். இதுவரையில் 26 லட்சத்து 62 ஆயிரத்து 386 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 10 ஆயிரத்து 474 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.