

திருவள்ளூர்,
அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் மீன், இறால் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் செயின்ட் பீட்டர் பால் என்ற தொழிற்சாலையில் நேற்று முன்தினம் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 77 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதில் ஜூவான், மலோத்தி ஆகிய 2 பெண் தொழிலாளர்கள் அன்றைய தினமே உயிரிழந்தனர்.
திருவள்ளூர் பகுதியில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் 49 பேரும், எஞ்சியவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டாக்டர்கள் தொடர்ந்து அவர்களை கண்காணித்து வருகின்றனர்.
நேற்று காலை சிகிச்சையில் இருந்த 75 பேரில் 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதாவது ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பூர்ணிமா ஜூங்கா (18), ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கீதா ஜூவாங்கா (24), தனியார் ஆஸ்பத்திரியில் சபினி (22) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மதியம் ஸ்டான்லி ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பாப்பவதி ஜூங்கா (19), புலோமினி ஆகியோரும் உயிரிழந்தனர். மாலையில் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த சீதா(23) என்ற பெண் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இதுவரை உயிரிழந்த 8 பேரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், திருவள்ளூர் பெரியபாளையத்தில் உள்ள ஆலையில் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அஞ்சிலா சுரின்(26) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 60 தொழிலாளர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.