விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு

20 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு
Published on

விருதுநகர்,

விருதுநகர் தாலுகா சங்கரலிங்காபுரம் அருகே உள்ள கோவிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாணிக்கம் (வயது 52). இவர் கட்டனார்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை கட்டனார்பட்டி பகுதி யில் இயங்கி வந்தது. மாவட்ட வருவாய் அதிகாரியின் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 5 அறைகளில் பட்டாசு உற்பத்தி நடந்து வந்ததாக தெரிகிறது.

நேற்று காலையில் அந்த ஆலைக்கு ஆண்களும், பெண்களுமாக 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வந்திருந்தனர். வழக்கம்போல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு இருந்தனர். மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் தொழிலாளர்கள் பட் டாசு உற்பத்தியில் மும்முரமாக இருந்த நிலையில் பட்டாசு தயாரிக்கும் ஒரு அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. உடனே அடுத்தடுத்து இருந்த அறைகளுக் கும் தீ பரவி, அந்த அறைகளில் இருந்த பட்டாசுகளும் வெடித்து சிதற தொடங்கின. தகவல் அறிந்து விருதுநகர், சிவகாசி, சாத்தூர் ஆகிய இடங் களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தண்ணீரை பீய்ச்சி அடித்து கொஞ்சம், கொஞ்சமாக முன் னேறி மீட்பு பணிகளை தீயணைப்பு வீரர்கள் தொடங்கினர். போலீஸ் அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர்.

ஆனால், இடிபாடுகளுக்கு இடையே உடல்கள் சிதறிய நிலையிலும், கருகிப்போய் கிடந்த நிலையிலும் இருந்தது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர்களது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போய் இருந்தன. மொத்தம் 23 பேர் பலியானது தெரியவந்தது. உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் தொழிலாளர்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார் என 21 பேர் காயமடைந்தனர்.

அவர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர். சம்பவ இடத்தை விருதுநகர் மாவட்ட கலெக்டர் சுகபுத்ரா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி ஒருவர், பஞ்சவர்ணம் என்ற பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. 20 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 3 பெண்கள் மற்றும் 1 ஆணின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

உடற்கூராய்வு பணிக்காக நெல்லை, மதுரையில் இருந்து 14 சிறப்பு மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்தில் பலியானவர்களில் 16 பேர் சேர்வைக்காரன்பட்டி என்ற ஒரே ஊரை சேர்ந்தவர்கள். 4 தனிப்படை அமைத்து பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com