நீட் தேர்வு காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல - கனிமொழி எம்.பி. கருத்து

நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல என்று திமுக கனிமொழி எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல - கனிமொழி எம்.பி. கருத்து
Published on

சென்னை,

நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் மதுரையில் இன்று ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அந்த மாணவி கடைசியாக பேசிய ஆடியோவில் கூறியுள்ளார். கடந்த வாரம் அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சம் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களிடையே நீட் தேர்வு பெரும் மன அழுத்ததை ஏற்படுத்துவதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது;-

நீட் தேர்வு காரணமாக நடைபெறும் மரணங்கள் தற்கொலைகள் அல்ல. மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கொலைகளே. காவல்துறை அதிகாரி முருகசுந்தரத்தின் மகள் ஜோதி துர்கா, நீட் தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவர்கள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது.

கடந்த வாரம், தேனியை சேர்ந்த விக்கிரபாண்டி, உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நித்யஶ்ரீ ஆகியோர் ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதே வாரத்தில், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப் போகிறோம்? என்று கனிமொழி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com