குடிநீருடன் கழிவுநீரால் உயிரிழப்பு: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது. இந்த அடிப்படைத் தேவையைக்கூட பூர்த்தி செய்ய இயலாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் பகுதியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் வந்துள்ள செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது. மேற்படி பகுதியில், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக மாநகராட்சி மன்ற உறுப்பினர் முதல் உயர் அதிகாரிகள் வரை அப்பகுதி மக்கள் பலமுறை எடுத்துக் கூறியும், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மூன்று பேரின் உயிரிழப்பை இந்த அரசு தடுத்து இருக்க முடியும் என்பதோடு, முப்பதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் தவிர்த்திருக்க முடியும். இந்தப் பிரச்சனைக்கு தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இது ஒருபுறம் என்றால், மறுபுறம் அதே திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், மருதண்டாகுறிச்சி பஞ்சாயத்திற்குட்பட்ட ஏகிரிமங்கலம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடந்த ஒரு வார காலமாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.
இதற்குக் காரணமும் குடிநீரில் கழிவுநீர் கலப்புதான் என்று கூறப்படுகிறது. ஒரு மனிதனுக்கு 10.5 விழுக்காடு வரை கிருமிகளை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி இருக்கிறது என்றும், ஆனால் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடலில் 15 விழுக்காட்டிற்கும் அதிகமாக கிருமிகள் இருக்கின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக, அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இதுகுறித்து தி.மு.க. அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.பாதுகாக்கப்பட்ட குடிநீரைக்கூட வழங்க இயலாத திறமையற்ற அரசாக தி.மு.க. விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் எத்தனை இடங்களில் பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகிக்கப்படுகிறதோ என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
ஒருபக்கம் சட்டம் ஒழுங்கு சீரழிவால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்றால், மறுபக்கம் கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தி.மு.க. அரசின் கவனக் குறைவிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.தமிழக முதலமைச்சர்
இதில் உடனடியாகத் தலையிட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீரை விநியோகிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினால் மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்






