தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பு - அண்ணாமலை குற்றச்சாட்டு

கடந்த 4 ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, போதிய மருத்துவர்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ளன. நான்கு ஆண்டுகளாக, மருத்துவர்களை நியமிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்?

மருத்துவர்கள் நியமனம் எதனால் தாமதமாகிறது? எத்தனை சிறு குழந்தைகளைத் தொடர்ந்து பறி கொடுத்து வருகிறோம்? இதோ, அதோ என்று, நான்கு ஆண்டுகளில் தமிழக மருத்துவத் துறையை நாசமாக்கிவிட்டு, கொஞ்சம் கூட மனசாட்சி இன்றிப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூச்சமாக இல்லையா அமைச்சருக்கு? இத்தனை கையாலாகாத அமைச்சரை, மிக முக்கியமான சுகாதாரத் துறையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு, தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் தொடர் உயிரிழப்புகள் தெரியுமா தெரியாதா?

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த சிறுவன் குடும்பத்தினருக்கு, தி.மு.க. கட்சியிலிருந்து உதவி செய்யப் போவதாகக் கூறியிருப்பது, தி.மு.க. அரசின் தோல்வியை மூடி மறைக்கவா? தி.மு.க. கொடுக்கும் பணம், குழந்தையின் உயிருக்கு ஈடாகிவிடுமா? தமிழக அரசு ஏன் பொறுப்பேற்கவில்லை? அரசு சார்பில் ஏன் இழப்பீடு அறிவிக்கவில்லை?

இந்தக் கையாலாகாத தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பறிகொடுக்க வேண்டும்? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com