

சென்னை,
கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் உயிரிழப்புகள் தொடர்பாக தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணையம்(NCSK) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, கடந்த 2016 முதல் 2026 வரையிலான 11 ஆண்டு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியின்போது 100 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆணையத்தின் அறிக்கையின்படி, 2026-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் இதுவரை கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது 31 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இதில் 9 வழக்குகளுக்கு முழு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டில் இதுவரை அரியானாவில் அதிகபட்சமாக 8 உயிரிழப்புகளும், அதைத் தொடர்ந்து மராட்டிய மாநிலம் மற்றும் டெல்லியில் தலா 6 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. உத்தர பிரதேசத்தில் 3 பேர், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதே போல் கடந்த 2025-ம் ஆண்டில், 51 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 28 வழக்குகளில் முழு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 10 உயிரிழப்புகளும், அதைத் தொடர்ந்து அரியானா மற்றும் டெல்லியில் தலா 7 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அதற்கு முன்னதாக 2024-ஆம் ஆண்டில், 54 உயிரிழப்புகள் பதிவான நிலையில், 43 வழக்குகளுக்கு முழு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள 11 ஆண்டுகளில், நாடு முழுவதும் மொத்தமாக 773 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதில் 677 வழக்குகளுக்கு முழு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, 2016-2026 காலகட்டத்தில் தமிழ்நாடு மற்றும் மராட்டிய மாநிலத்தில் தலா 100 உயிரிழப்புகளும், அதைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் 98, குஜராத்தில் 86 மற்றும் அரியானாவில் 85 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
மாவட்ட நிர்வாகங்கள், காவல்துறை அதிகாரிகள், மாநில அரசு துறைகள், மற்றும் பிற அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மூலம் பெறப்பட்ட தகவல்களில் இருந்து இந்த தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளதாக தேசிய துப்புரவுத் தொழிலாளர் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.