

சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று அரசின் இடைக்கால பட்ஜெட் மற்றும் இடைக்கால வேளாண்மை பட்ஜெட் ஆகியவை ஒரே நாளில் தாக்கல் செய்யப்பட்டன. அதன் பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், குழு உறுப்பினர்களாக உள்ள அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில், பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். வரும் 20ம் தேதி பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு பதில் அளிக்கும் நிதியமைச்சர், கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் பேரவையில் இன்று தொடங்குகிறது. முதலாவதாக இன்று (18-02-2026) முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மறைவு குறித்து சட்டசபையில் இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். பின்னர். மராட்டிய மாநில முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித் பவார், மூத்த கல்வியாளர் ராசகோபாலன் ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
அதைத்தொடர்ந்து சட்டசபையில் வாசித்தளிக்கப்பட்ட 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் மற்றும் இடைக்கால வேளாண்மை பட்ஜெட் ஆகியவற்றின் மீதான எம்.எல்.ஏ.க்களின் பொது விவாதம் தொடங்குகிறது. நாளை (வியாழக்கிழமை) பொது விவாதம் தொடர்ந்து நடைபெறும்.
20-ந்தேதியன்று 2 இடைக்கால பட்ஜெட்டின் பொது விவாதத்திற்கும் முறையே அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பதில் அளித்து பேச உள்ளனர். 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கைகள் மற்றும் 2026-2027-ம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானிய கோரிக்கைகள் ஆகியவை அவைக்கு அளிக்கப்பட உள்ளது. அவற்றிற்கான சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதமின்றி நிறைவேற்றப்படுகிறது.