

சென்னை,
தமிழக பட்ஜெட்டை தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று தொடங்குகிறது.
தமிழக சட்டசபையில் கடந்த 5-ந் தேதி, 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 7, 10, 11 ஆகிய தேதிகளில் 3 நாட்கள், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, சட்டசபையில், 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சட்டசபை கூட்டம் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து வியாழன் (13-ந் தேதி) மற்றும் வெள்ளிக்கிழமை (14-ந் தேதி) சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை. நேற்று முன்தினம் (15-ந் தேதி) சுதந்திர தினம் என்பதால், அரசு விடுமுறை நாளாகும். அடுத்த நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இப்படி, தொடர்ந்து 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று 17-ந் தேதி (திங்கட்கிழமை) சட்டசபை மீண்டும் கூட இருக்கின்றது. அதில் முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதமும் தொடங்குகிறது.
முதல் நாளில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகியவை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.