

சென்னை,
தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் கடந்த மாதம் (மே) 10-ந் தேதி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
விழா மேடையில் அவர் பேசும்போது, தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை கடந்திருப்பதாகவும், நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அறிவித்தார். ஆட்சி அமைத்து 36 நாட்கள் கடந்த நிலையில், நேற்று மாலை திடீரென வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.
தமிழக மக்கள் அனைவரும் மாநிலத்தின் மொத்த கடன் ரூ.10 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், எல்லோரும் அதிர்ச்சி அடையும் வகையில் ரூ.13 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக கடன் அளவு உயர்ந்து நிற்பது வெள்ளை அறிக்கை மூலம் வெளிவந்தது.
கடந்த 60 ஆண்டுகளில் வாங்கிய கடன் ரூ.5 லட்சம் கோடியாக இருக்க, கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் மேலும் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் கடன் மட்டும் ரூ.1 லட்சம் கோடி வாங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.46,538 கோடியில் இருந்து ரூ.78,324 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழக மக்கள் ஒவ்வொருவர் தலைக்கும் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 934 கடன் உள்ளது. இன்று பிறக்கும் குழந்தையை கூட இந்த கடன் சுமை விட்டுவைக்கவில்லை.
வாங்கிய கடன் இவ்வாறு இருக்க கடந்த நிதியாண்டில் (2025-26) வட்டிக்கான செலவு மட்டும் ரூ.67,050 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு நாளும் ரூ.184 கோடியை வட்டிக்காக மட்டும் ஒதுக்க வேண்டியுள்ளது.
மாநிலத்தின் கடன் அளவு, மொத்த மாநில உற்பத்தி மதிப்பில் 28.3 சவீதமாக உள்ளது. அதாவது, அபாய கட்டத்தில் இருப்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், வாங்கிய கடனுக்கு வட்டி என கட்டாய செலவு மட்டும் 64.4 சதவீதமாக உள்ளது.
அதாவது, அரசுக்கு ரூ.100 வரவு என்றால், அதில் கட்டாய செலவுக்கு மட்டும் ரூ.64.40 சென்றுவிடுகிறது. மீதியுள்ள ரூ.35.60-ஐ வைத்துக்கொண்டுதான் வளர்ச்சி பணிகள் உள்ளிட்டவைகளை கவனிக்க வேண்டியுள்ளது. இது எப்படி சாத்தியமாகும்.
தற்போதைய நிலையில், ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டிய சூழல் தமிழக அரசுக்கு இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் அளவு ரூ.20 லட்சம் கோடியை எட்டும் நிலை ஏற்படும்.
எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு, துறைகள் தோறும் சீர்திருத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மொத்தம் 55 துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறைகளை கவனிக்கவும் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் மூலம் துறையின் வரவு - செலவுகளை ஆராய வேண்டும். தேவையில்லாத செலவினங்களை தடுக்க வேண்டும்.
அதிக அளவு கடனில் தத்தளிப்பதில் மின் துறைதான் முதலிடத்தில் உள்ளது. மின் துறை கடன் மட்டும் ரூ.2.47 லட்சம் கோடியாக உள்ளது. மாநில அரசின் மொத்த உத்தரவாத கடனில் மின் துறைக்கு 79 சதவீதம் வழங்கப்படுகிறது. போக்குவரத்து துறையும் ரூ.72,667 கோடி இழப்பை சந்தித்து வருகிறது.
த.வெ.க. அரசு பொறுப்பேற்றவுடன் டாஸ்மாக் நிறுவனத்தில் செய்த மாற்றங்கள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், மின் துறை, போக்குவரத்து துறை உள்பட ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தங்கள் கொண்டு வந்து செலவை குறைத்து, வருவாயை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய நிலையில், கடன் எனும் கடலில், தமிழகம் எனும் கப்பல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. துறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கப்பலில் 55 ஓட்டைகள் இருக்கின்றன. இந்த துளைகள் வழியாக கடன் எனும் தண்ணீர் கப்பலின் உள்ளே சென்று கொண்டிருக்கிறது.
இது தொடர்ந்து அதிகரித்தால், கப்பல் மூழ்கும் நிலை ஏற்படும். எனவே, துறைகள் தோறும் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் ஒவ்வொரு துளைகளையும் அடைத்து, நிதிச்சுமையில் இருந்து விடுவித்து, கப்பலின் உள்ளே தேங்கிய நீரையும் வெளியேற்றினால், கடன் எனும் கடலில் இருந்து மீண்டு, தமிழகம் எனும் கப்பல் கரைசேரும். ஆனால், குறுகிய காலத்தில் இது நடந்துவிடாது.
எனவே, அதற்கு ஏற்ற வகையில் த.வெ.க. அரசு திட்டமிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் குறிப்பிட்ட காலம் தள்ளிவைத்து, நிதி மேலாண்மையை கையாள வேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கோரிக்கையாக உள்ளது.