சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சட்டசபையில் தீர்மானம்: பா.ம.க. ஆர்ப்பாட்டத்தில், டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சென்னையில் நடந்த பா.ம.க. ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சட்டசபையில் தீர்மானம்: பா.ம.க. ஆர்ப்பாட்டத்தில், டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பா.ம.க. இளைஞர் சங்கம் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.எல்.ஏ. தீரன், துணை பொதுசெயலாளர்கள் ஏ.கே.மூர்த்தி, கே.என்.சேகர், இளைஞர் சங்கத்தின் செயலாளர் கணேஷ்குமார் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஓ.பி.சி. என்ற இடத்தில் சாதி பெயரை பெற வேண்டும். இதற்கு செலவு ஒன்றும் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மராட்டியம், ஒடிசா மாநில சட்டசபையில் தீர்மானம் போட்டு இருக்கிறார்கள். எனவே மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு நடத்தவில்லை என்றால் தமிழ்நாடு அரசே நடத்தும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்ல வேண்டும்.

இந்திய அளவில் சமநிலையற்ற, சமூகநீதியற்ற ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். அதனை சரி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் ஆகும். இது சாதியின் பலத்தை காட்டுவதற்காக அல்ல. சமூக நீதி அடிப்படையில் சமுதாயத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதற்காக தான் வலியுறுத்துகிறோம்.

பெரியார் விட்டு சென்ற இந்த கோரிக்கை வெற்றி பெற அயராது பாடுபடுவோம். தற்போது நம்முடன் மத்தியிலும், மாநிலத்திலும் இணைக்கமாக அரசு இருக்கிறது. நிச்சயம் நம்முடைய கோரிக்கை நிறைவேறும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல் கே.பாலு, மாநில மாணவர் அணி செயலாளர் செஞ்சி ரவி, மாவட்ட அமைப்பாளர் மு.ஜெயராமன், செயலாளர் வே.வடிவேலு உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், தேசிய நாடார் சங்க பொதுசெயலாளர் விஜயகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com