வாட்ஸ்-அப், பேஸ்புக் மூலம் மக்களை கவர முடிவு: சமூக வலைத்தள அரசியல் பணிகளை முன்னெடுக்கும் த.வெ.க.

கோப்புப்படம்
நேரடி மக்கள் சந்திப்புடன், சமூக வலைத்தள அரசியல் பணிகளை முன்னெடுக்க த.வெ.க. தயாராகி வருகிறது.
சட்டசபை பொது தேர்தலை சந்திக்க த.வெ.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. தேர்தலில் முக்கிய பங்களிப்பாக திகழும் பூத் கமிட்டிக்கு த.வெ.க. முழுமையாக நிர்வாகிகளை நியமித்து முடித்துள்ளது. அடுத்த கட்டமாக இணைய வழியில் மக்களை கவர விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக சமூக வலைத்தளங்கள் வாயிலாக அரசியல் முன்னெடுப்புகளை தொடங்கி இருக்கிறார்.
சமூக ஊடகங்களை நிர்வகிக்க புதிய நிர்வாகிகளையும் விஜய் நியமித்துள்ளார். வாட்ஸ்-அப் குழுக்கள், பேஸ்புக், எக்ஸ் தளம் மூலம் கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்களை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. பூத் கமிட்டி வாரியாக குழுக்களை அமைத்து அவர்களுடன் உரையாடவும், கட்சி பணிகளை விரைவுபடுத்தவும் தேர்தல் காலக்கட்டத்தில் பலன் அளிக்கும் என்று விஜய் நம்புகிறார்.
விஜய் பங்கேற்கும் முக்கிய நிகழ்வுகளை நேரடியாக வலைத்தளங்கள் மூலம் ஒளிபரப்பவும், முக்கிய இடங்களில் உரிய அனுமதி பெற்று அகன்ற திரையில் ஒளிபரப்பவும் த.வெ.க. சார்பில் திட்டமிடப்பட்டு வருகிறது. வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் நிர்வாகிகளிடம் தகவல் பரிமாற்றத்தை கொண்டு வந்து அதன் மூலம் உடனுக்குடன் கட்சி சார்ந்த திட்டங்களை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்ல விஜய் விரும்புகிறார். தற்போது அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. குழுக்களில் இடம் பெறுவோர் தாங்கள் சார்ந்திருக்கும் பகுதியில் த.வெ.க. வளர்ச்சி, மற்ற கட்சிகளின் செல்வாக்கு குறித்தும் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்களை பெறும் தொண்டர்கள், நிர்வாகிகள் வீடு, வீடாக சென்று த.வெ.க.விற்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.
இது தவிர ஒவ்வொரு தொகுதியிலும் மக்களிடம் விஜய் காணொலி காட்சியாக சந்தித்து பேசும் வகையில் செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. நவம்பரில் கட்சி சின்னம் கிடைக்கும் பட்சத்தில் அதனை உடனடியாக கட்சியின் சமூக வலைத்தள குழுக்களில் பரப்பி, உடனுக்குடன் மக்கள் மத்தியில் கொண்டு செல்லவே இதற்கான ஏற்பாடு வகுக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடியான சமூக வலைத்தள அரசியல் எந்த வகையில், மக்கள் மன்றங்களில் த.வெ.க.வுக்கு கைகொடுக்கும் என்பது போக, போக தான் தெரியும்.
இது குறித்து த.வெ.க. நிர்வாகிகள் கூறும்போது, 'சமூக வலைதள அரசியலில் த.வெ.க.தான் முன்னணியில் இருக்கிறது. 90 சதவீதம் பேர் இப்போது பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் குழுக்களை பயன்படுத்துகிறார்கள். காலத்திற்கேற்ப நாங்களும் புதிய 'டெக்னாலஜி' முறையில் மக்களை சென்றடைவோம்.
ஜூலை முதல் மக்கள் சந்திப்பை எங்கள் தலைவர் தொடங்க இருக்கிறார். கட்சியின் 3-ம் ஆண்டு தொடக்க விழா அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்க உள்ளது. அதற்குள் மக்கள் சந்திப்பை நடத்தி முடிக்கவும், மார்ச் மாதம் கட்சியின் 2-ம் மாநாட்டை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.






