

மதுரை,
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மகிழன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தஞ்சாவூரில் நாடியம்மன் கோவில், முனீஸ்வரன் கோவில் உள்பட பல கோவில்களை பரம்பரை அறங்காவலர்கள் நிர்வகித்து வந்தனர். இதில் சாதி ரீதியான கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில் இந்த கோவில் விவகாரத்தில் கடந்த அரசின் அமைச்சரின் பரிந்துரையின்பேரில் முனீஸ்வரன் கோவிலை மட்டும் தனியாக பிரித்து தனி நிர்வாகத்தின் கீழ் அறநிலையத்துறை கொண்டு வந்தது. இது சட்டவிரோதம். எனவே முனீஸ்வரன் கோவிலை தனிநிர்வாகத்தில் கொண்டு வந்ததை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, சமீபத்தில் இந்த கோவில் நிலங்களை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து கோவில் சொத்துகளை பாதுகாக்க பரம்பரை அறங்காவலர்கள் நடவடிக்கை எடுத்தனர். அதன்பின்புதான் அதிருப்தி அடைந்த சிலர் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இது ஏற்புடையதல்ல என வாதாடினார்.
எதிர்தரப்பினர் சார்பில் ஆஜரான வக்கீல்கள், நாடியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. முனீஸ்வரன் கோவிலை உள்ளூர் மக்களில் சில தரப்பினர் குலதெய்வமாக வழிபடுகின்றனர். பரம்பரை அறங்காவலரின் நிர்வாகத்தில் இருக்கும்போது வழக்கமான உரிமைகள் பாதிக்கப்பட்டன. இதனால் கோவிலை பிரிக்கும்படி கோரிக்கை வைத்ததன்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
கோவில்களை இணைப்பது அல்லது பிரிப்பது குறித்த முடிவை, கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நலன்களை கருத்தில் கொண்டு எடுக்க வேண்டும். இத்தகைய முடிவுகளை சாதி அடிப்படையிலான காரணங்களை சார்ந்து எடுக்கக்கூடாது. ஒரு அமைச்சரின் பரிந்துரை மட்டுமே நிர்வாக முடிவுக்கு அடிப்படையாக அமைய முடியாது. கோவில் பிரிப்பு உத்தரவில் அமைச்சரின் பரிந்துரை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கோவில் பிரிப்பு தொடர்பாக அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தை அறநிலையத்துறை ஆணையர் மீண்டும் பரிசீலித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க வேண்டும். பின்னர் கோவில்கள் மற்றும் பக்தர்களின் நலனுக்கு எது சிறந்தது என்பது தொடர்பாக அறநிலையத்துறையின் கருத்துகளையும் பெற்று சட்டத்துக்கு உட்பட்டு 3 மாதத்தில் புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கோவிலை பிரித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு புதிய பரிசீலனைக்காக அறநிலையத்துறை ஆணையருக்கு திரும்ப அனுப்பப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.