பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம், தங்கரத புறப்பாடு கட்டணங்களை உயர்த்த முடிவு

இது தொடர்பாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு தொடர்பான அறிவிப்பு ஒன்று கோவில் தலைமை அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம், தங்கரத புறப்பாடு கட்டணங்களை உயர்த்த முடிவு
Published on

பழனி,

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பிரசாதமாக பஞ்சாமிர்தம் வாங்கி செல்கின்றனர். இந்த பஞ்சாமிர்தம் கோவில் நிர்வாகம் சார்பில் மலைக்கோவில் மற்றும் அடிவாரம் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு வழங்கப்படும் ½கிலோ டின் பஞ்சாமிர்தம் டப்பா ஒன்றின் விலை ரூ.45-க்கும், 200 கிராம் டப்பா ரூ.20-க்கும் விற்கப்படுகிறது.

பஞ்சாமிர்தம் விலை ஏற்றம்

இந்நிலையில் மூலப்பொருட்கள் விலை ஏற்றம் காரணமாக பஞ்சாமிர்தம் விலையை ஏற்ற கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.45-க்கு விற்கப்பட்டு வந்த பஞ்சாமிர்தம் டப்பா ரூ.60-க்கும், ரூ.20-க்கு விற்கப்பட்ட பஞ்சாமிர்தம் டப்பா ரூ.30-க்கும் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு தொடர்பான அறிவிப்பு ஒன்று கோவில் தலைமை அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து ஏதும் இருந்தால் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கரத புறப்பாடு

இதேபோல் பழனி மலைக்கோவிலில் தினசரி இரவு 7 மணிக்கு தங்க ரதம் புறப்பாடு நடை பெற்று வருகிறது. இந்த தங்கரத புறப்பாட்டில் கலந்து கொண்டு தங்க ரதம் இழுத்து வழிபடும் பக்தர்களுக்கு ரூ.2 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தங்க ரதம் இழுத்து வழிபடும் பக்தர்களுக்கு பரிவட்டம், முருகன் படம் எவர்சில்வர் குடம் உள்ளிட்ட 18 பொருட்கள் வழங்கப்படுகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் ரூ.2 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. விலை வாசி உயர்வு காரணமாக தங்க ரதம் கட்டணத்தை ரூ.2 ஆயிரத்து 500-ஆக உயர்த்த கோவில் நிர்வாகம் சார்பில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எதுவும் ஆலோசனை அல்லது கருத்துக்கள் இருந்தால் ஜூலை 7-ந்தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை ஒட்டப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com