‘தியேட்டர்களை திறப்பது பற்றி நிலைமைக்கு ஏற்றபடி முடிவு’அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு பற்றி நிலைமைக்கு ஏற்றபடி முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
‘தியேட்டர்களை திறப்பது பற்றி நிலைமைக்கு ஏற்றபடி முடிவு’அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
Published on

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திரைப்படத்துறை என்பது திரையரங்குகள் மட்டுமல்ல. அதில் ஒரு அம்சம்தான் திரையரங்கு. ஊரடங்கு நடைமுறையின்படி, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அவர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க படப்பிடிப்பு தொடர்பான கோரிக்கை வைத்தனர். சில கட்டுப்பாடுகளுடன் அதை அரசு அனுமதித்துள்ளது. சின்னத்திரை படப்பிடிப்பும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

திரைப்பட துறையில் நல வாரியம் மூலமாக 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகையை அரசு வழங்கியுள்ளது. இப்படி ஒவ்வொரு அம்சமாக பார்த்து பார்த்து ஊரடங்கு தளர்வு நேரத்தில் அறிவிப்புகளை முதல்-அமைச்சர் வெளியிட்டு வருகிறார்.படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்ட படங்களுக்கான, சவுண்ட் எபக்ட் போன்ற பிந்தைய பணிகளுக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் ஊரடங்கு காலத்திலும் வாழ்வாதாரங்களுக்கான தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் திரைப்பட துறையினருடன் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழ் திரையரங்க உரிமையாளர்களுக்கு அழைப்பு வரவில்லை என்று கூறப்பட்டது. உடனடியாக மத்திய அரசை முதல்-அமைச்சர் அறிவுறுத்தி தமிழ் திரையரங்க உரிமையாளர்களை அதில் பங்கு பெற ஏற்பாடு செய்தார்.

இன்னும் முழுமையான வழிகாட்டுதல்கள், மத்திய அரசிடம் இருந்து வரவில்லை. மேற்கு வங்காளத்தில் அக்டோபர் 1-ந் தேதி (நாளை) முதல் திரையரங்குகளை திறக்க அந்த மாநில முதல்-மந்திரி அனுமதி அளித்துள்ளார். நமது மாநிலத்திலும் இதுபற்றி முதல்-அமைச்சர் ஆய்வு செய்துள்ளார். இங்கு இருக்கின்ற நிலைமைக்கு தகுந்தபடி யாரும் கேட்காமலேயே தளர்வுகளை முதல்-அமைச்சர் அறிவித்து வருகிறார். அதன்படி, கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, சூழ்நிலைக்கு ஏற்றபடி திரையரங்குகளை திறக்கும் விஷயத்தில் தகுந்த முடிவை அவர் அறிவிப்பார்.

திரையரங்க உரிமையாளர்கள் என்னை சந்தித்தனர். அவர்களின் கோரிக்கையை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வதாக கூறியிருக்கிறேன். திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள கோவில்கள், வணிக வளாகங்களில் அதிக நேரம் மக்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் தியேட்டர்கள் அப்படியல்ல. 3 மணி நேரமாக அங்கே மக்கள் அமர்ந்திருப்பார்கள். எனவே இதில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி முதல்-அமைச்சர் விரைவில் முடிவை அறிவிப்பார்.

ஓ.டி.டி. வழியில் சினிமா திரையிடுவது, திரைத்துறையினர் சம்பந்தப்பட்டது. சினிமா தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் அமர்ந்து பேச வேண்டிய விஷயம் அது. அவர்கள் பேச்சுவார்த்தையை சுமுகமாக நடத்த அரசு உதவி செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com