சிறுவாணி அணையை ரூ.64 கோடியில் சீரமைக்க முடிவு: இருமாநில அதிகாரிகள் ஆலோசனை

போதிய மழை இல்லாத காரணத்தால் தற்போது அணையின் நீர்மட்டம் 10 அடிக்கும் குறைவாகவே இருக்கிறது.
சிறுவாணி அணை
Published on

கோவை,

சிறுவாணி அணையை ரூ.64 கோடியில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவாணி அணை

கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்க்காடு அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் சிறுவாணி அணை உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து கோவைக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அணையின் ஒரு பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. தினமும் 10 கோடி லிட்டர் தண்ணீர் இந்த அணையில் இருந்து எடுக்கப்படும்.

போதிய மழை இல்லாத காரணத்தால் தற்போது அணையின் நீர்மட்டம் 10 அடிக்கும் குறைவாகவே இருக்கிறது. இதனால் தினமும் அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைவாகவே உள்ளது. அத்துடன் அணையின் மெயின் ஷட்டர் பகுதியில் கசிவு அதிகமாக இருப்பதால், அதில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாகிறது.

புனே குழுவினர் ஆய்வு

இதையடுத்து புனேவில் இருந்து சிறப்பு தொழில் நுட்ப குழுவினர் வரவழைக்கப்பட்டு, கசிவை எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடைக்கலாம் என்று ஆய்வு செய்யப்பட்டது. அவர்கள் திட்ட அறிக்கை தயாரித்து கேரளம் அரசுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இருமாநில அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில், சிறுவாணி அணையை சீரமைக்க ஆகும் செலவு தொகையை கேரளம் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

சிறுவாணி அணையின் மேம்பாட்டு திட்டம் தொடர்பான இரு மாநில அதிகாரிகளின் கூட்டுக்குழு கூட்டம் பாலக்காட்டில் நடந்தது. இதில் தமிழக குடிநீர் வடிகால் வாரியம், கோவை மாநகராட்சி மற்றும் கேரளம் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறுவாணி அணையின் பாதுகாப்பு, அதை பலப்படுத்தும் திட்டம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது புனே குழுவினர் நவீன தொழில்நுட்ப முறையில் கசிவை சரிசெய்ய ரூ.93 கோடி செலவாகும் என அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர்.

ரூ.64 கோடியில் பணி

ஆனால் அது அதிகம் என்பதால் பல்வேறு ஆலோசனைக்கு பிறகு ரூ.64 கோடியில் அணையை சீரமைக்கும் பணியை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அத்துடன் 3 வகையான அதிக அழுத்தத்தில் சிமெண்டு, வேதிப்பொருட்களின் கலவையை சிறுதுளை வழியாக அணையின் பக்க சுவரில் செலுத்தி பலப்படுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.

அதை இருமாநில அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டனர். இது தொடர்பாக விரைவில் கேரளம் அரசு தமிழக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு கடிதம் அனுப்பும். அதன் பின்னர் அணையை சரிசெய்ய தேவையான நிதி கேரளம் அரசிடம் கொடுக்கப்படும். பின்னர் உடனடியாக பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com