பயணிகள் வருகை குறைவு எதிரொலி; சேலம் விமான நிலையம் மூடலா..?

மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால், 'உடான்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பயணிகள் வருகை குறைவு எதிரொலி; சேலம் விமான நிலையம் மூடலா..?
Published on: 

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து தற்போது சென்னைக்கு மட்டுமே விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம், சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து இரவு நேர விமான சேவை மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

சாதாரண மக்களும், குறைந்த கட்டணத்தில், விமான பயணம் மேற்கொள்ள மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தால், 'உடான்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான மதிப்பு இடைவெளி நிதி மானியத்தில் 80 சதவீதம் மத்திய அரசும், 20 சதவீதம் மாநில அரசும் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், சேலம் விமான நிலையத்திற்கு தமிழக அரசு சார்பில், 2024-25-ம் ஆண்டில் ரூ.106 கோடியும், 2025-26ம் ஆண்டில் ரூ.110 கோடியும் ஒதுக்கப்பட்டது.

தவெக அரசு பொறுப்பேற்ற பின், நடப்பாண்டிற்கான உடான் நிதி ஒதுக்கப்படவில்லை. மூன்று ஆண்டு மானிய ஒப்பந்த காலமும் நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக சேலத்தில் இருந்து ஐதராபாத், கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்பட்ட முக்கிய விமான சேவைகள், ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டன. தற்போது, சேலத்தில் இருந்து சென்னைக்கு மட்டும் இரண்டு சேவைகள் இயக்கப்படுகின்றன. அதிலும், சராசரியாக 112 பயணிகள் மட்டுமே தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.

போதிய பயணிகள் இல்லாததாலும், மாநில அரசின் மானியம் கிடைக்காததாலும், விமான நிறுவனங்களுக்கு, கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இரண்டு விமான சேவைகளையும், அடுத்த மாதத்துடன் நிறுத்த விமான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதனால் சேலம் விமான நிலையம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், 'உடான் ஒப்பந்த காலம் முடிந்ததும், வணிக ரீதியான காரணங்களால் விமான சேவைகள் குறைந்தன. அடுத்த கட்ட உடான் ஏல சுற்றுகளில் சேலம் வழித்தடங்களை சேர்த்து தமிழக அரசு உரிய நேரத்தில் நிதியை விடுவித்தால் மட்டுமே டிசம்பருக்கு பின்னும் விமான சேவைகளை தக்கவைக்க முடியும் என்றனர்.

X