மெரினா வந்த சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்திகள்; பொதுமக்கள் 23-ந் தேதி வரை கண்டுகளிக்கலாம்

சென்னை மெரினா கடற்கரையில் சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்திகள் 23-ந் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மெரினா வந்த சுதந்திர போராட்ட வீரர்களின் அலங்கார ஊர்திகள்; பொதுமக்கள் 23-ந் தேதி வரை கண்டுகளிக்கலாம்
Published on

அலங்கார ஊர்திகள்

டெல்லியில் கடந்த மாதம் 26-ந் தேதி நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., பாரதியார் உள்பட சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளின் உருவ சிலைகள் உள்ளடங்கிய அலங்கார ஊர்திகள் இடம் பெற மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை.

அதனைத்தொடர்ந்து சென்னை மெரினாவில் நடந்த குடியரசு தின விழாவில் இந்த ஊர்திகள் இடம்பெற்றன. அதன்படி சுதந்திர போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், குயிலி, வீரபாண்டிய கட்டபொம்மன், கர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், பூலித்தேவன், அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் உருவாக்கிய காளையார்கோவில் கோபுரம் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி, பாரதியார், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, சேலம் விஜயராகவாச்சாரி உள்பட சுதந்திர போராட்ட தியாகிகள் உருவ சிலைகளுடன் உருவாக்கப்பட்ட அலங்கார ஊர்தி, பெரியார், ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர், காமராஜர், இரட்டைமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, பொல்லான், திருப்பூர் குமரன், திருச்சி வ.வே.சாமிநாத அய்யர், காயிதே மில்லத், தஞ்சை ஜோசப் கொர்னேலியஸ் செல்லத்துரை குமரப்பா, கக்கன், கடலூர் அஞ்சலையம்மாள் ஆகியோரின் புகழை பறைச்சாற்றுகின்ற வகையில் தயாரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி என்று மொத்தம் 3 அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன.

மெரினா கடற்கரைக்கு வருகை

குடியரசு தினத்துக்கு பின்னர் 3 அலங்கார ஊர்திகளும் தமிழகம் முழுவதும் வலம் வரும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அவர், சென்னை தீவுத்திடலில் இருந்து இந்த 3 அலங்கார ஊர்திகளையும் கொடியசைத்து மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தார். இந்த 3 அலங்கார ஊர்திகளும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்றபோது அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டன. அந்தந்த மாவட்டங்களில் முக்கிய சந்திப்புகளில் இந்த அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வியந்தனர்.

தமிழகம் முழுவதும் சுற்றி வலம் வந்த இந்த அலங்கார ஊர்திகள் தனது பயணத்தை நிறைவு செய்து மீண்டும் தீவுத்திடலை வந்தடைந்தது. அடுத்ததாக பொது மக்கள் பார்வையிடுவதற்காக சென்னை மெரினா கடற்கரையில் 3 நாட்கள் நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் எதிரேயுள்ள மணற்பரப்பில் இந்த ஊர்திகள் நேற்று காலை கொண்டு வரப்பட்டன. இந்த ஊர்திகளுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் த.வேலு, இ.பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா உள்பட எம்.எல்.ஏ.க்கள், எஸ்.மதன்மோகன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மக்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி

இந்த அலங்கார ஊர்திகளை கடற்கரைக்கு வந்திருந்த பொதுமக்கள் அனைவரும் கண்டு ரசித்தனர். விடுதலை போராட்டத்தில் தமிழர்களின் மகத்தான தியாகங்களை எடுத்துரைக்கும் விதமாக சித்தரிக்கப்பட்ட காட்சி அமைப்புகளையும், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்த வீரர்களின் உருவ சிலைகளையும் கண்டு வியந்தனர்.

அந்த ஊர்திகள் முன்பு நின்றுகொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மாலை நேரம் மக்கள் கூட, இந்த அலங்கார ஊர்திகளை பார்வையிட வருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருந்தது.

ஊர்தி வடிவமைப்பாளர் பெருமிதம்

வ.உ.சி., பாரதியார் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் உருவசிலைகளுடன் கூடிய அலங்கார ஊர்தியை வடிவமைத்த ஆர்ட் டைரக்டர் எஸ்.டி.செல்வன் கூறியதாவது:-

இந்தியாவிலேயே நாட்டின் தலைநகர் டெல்லியிலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலும் மட்டும்தான் குடியரசு தினத்தன்று நாட்டின் பாரம்பரியம், சுதந்திரத்துக்காக இன்னுயிர் நீத்த தலைவர்களின் புகழை பறைச்சாற்றும் வகையிலும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடத்தப்படுகிறது.

வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற அலங்கார ஊர்திகள் வடிவமைப்பது கிடையாது. இந்த ஆண்டு தமிழக அலங்கார ஊர்திக்கு டெல்லியில் இடம் கிடைக்கவில்லை என்ற வேதனை இருந்தது. ஆனால் முதல்-அமைச்சர், சென்னை குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்தியை தமிழகம் முழுவதும் வலம் வர செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

பொதுவாக நாங்கள் வடிவமைக்கும் அலங்கார ஊர்தி குடியரசு தின விழா முடிந்ததும் அலங்காரங்கள் கலைக்கப்பட்டு விடும். ஆனால் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் வலம் வந்து, மக்கள் பூக்களை தூவி உற்சாகமாக வரவேற்றது பெருமிதமாக இருக்கிறது.

இந்த நேரத்தில் முதல்-அமைச்சர் மற்றும் அலங்கார ஊர்தியை தயாரிக்க வாய்ப்பு வழங்கிய செய்தித்துறை அமைச்சர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

23-ந் தேதி வரை...

இந்த 3 அலங்கார ஊர்திகள் வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) வரை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com