சென்னை துறைமுகத்தில் நடந்த விழாவில் கடல் ஆராய்ச்சிக்கான கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு காலநிலை மாற்றம் நீரோட்டம் குறித்த ஆய்வு

காலநிலை மாற்றம், கடல் நீரோட்டம் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே கண்டறிவதற்கான கடலோர ஆராய்ச்சி கப்பலை சென்னை துறைமுகத்தில் நடந்த விழாவில் மத்திய மந்திரி டாக்டர் ஹர்ஷவர்தன் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சென்னை துறைமுகத்தில் நடந்த விழாவில் கடல் ஆராய்ச்சிக்கான கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு காலநிலை மாற்றம் நீரோட்டம் குறித்த ஆய்வு
Published on

சென்னை,

தேசிய கடல் தொழில் நுட்பக் கழகத்தில் ஆராய்ச்சி கப்பல்கள் மூலம் விஞ்ஞானிகள் பல்வேறு நவீன அறிவியல் உபகரணங்கள் மூலம் சர்வதேச அளவிலான ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். பிரதமரின் சுயசார்பு திட்டத்தின் கீழ் ஆழ்கடலில் தண்ணீருக்கு அடியில் ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த 2019-ம் ஆண்டு சாகர் தாரா என்ற கப்பல் ஆராய்ச்சி பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

தொடர்ந்து சாகர் அனிவேஷிக்கா என்ற கப்பல் கடல் ஆராய்ச்சிக்காக நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா சென்னை, துறைமுகத்தில் நேற்று நடந்தது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புவியியல் துறை மந்திரி டாக்டர் ஹர்ஷவர்தன் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர் மத்திய மந்திரி டாக்டர் ஹர்ஷவர்தன் பேசியதாவது:-

நம் நாட்டில் பெரிய அளவில் கடல்சார் அறிவியலில் முன்னேற்றம் இல்லாமல் இருந்ததால் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியில் பெரிய அளவில் உயிர்சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது. ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் கடல்சார் அறிவியலில் பெரிய அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் கடந்த ஆறு ஆண்டுகளாக இயற்கை சீற்றத்தால் பெரிய அளவில் நாட்டில் எந்த விபத்தும் நடக்கவும் இல்லை, அதனால் உயிர்பலிகளும் ஏற்படவில்லை. இதற்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் செயல்படும் மத்திய அரசின் அறிவியல் துறை வளர்ச்சியே காரணமாகும். குறிப்பாக காலநிலை மாற்றத்தை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் உள்ளிட்ட முன்னணி நாடுகளுக்கு கிடைக்கும் வசதியை இப்போது நாமும் பெற்று உள்ளோம்.

கடல் வளத்தை பாதுகாக்கவும், அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆதரவுடன் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் இதுபோன்ற கப்பல்கள் ஆராய்ச்சிக்கு கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் காலநிலை மாற்றம், கடல் நீரோட்டம், கடல் மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை இந்தக் கப்பல் சேகரிக்க உள்ளது. அத்துடன் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செய்யப்படும் ஆய்வு முடிவுகள் மூலம் கடல் வளத்தை முறையாக பயன்படுத்த முடியும். பேரிடர் காலங்களில் கடலில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ச்சி கப்பல்கள் மூலம் துல்லியமாக கணக்கிடுவதன் மூலம் 50 சதவீதமான விவசாய இழப்புகள் தடுக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு உலக நாடுகள் கொரோனாவில் இருந்து மீள்வதற்காக சுகாதாரத்துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. ஆனால் நம் நாட்டில் சுகாதாரத்துறை மட்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தப்பட்டது. 90 சதவீதம் பேர் நோயில் இருந்து குணமடைந்தனர். இது நம்முடைய அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். கடந்த ஆண்டில் நோயை ஒழிக்க விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டதன் மூலம் 2020-ம் ஆண்டு அறிவியல் ஆண்டாக பார்க்கப்படுகிறது. கொரோனா நோயை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அனைத்து தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களும் ஒருங்கிணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தேசிய கடல் தொழில்நுட்பக் கழக தலைவர் ராமதாஸ் வரவேற்றார். திட்ட இயக்குனர் ராஜசேகர், சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் பி.ரவீந்திரன் ஆகியோர் பேசினர். விஞ்ஞானி பூர்ணிமா நன்றி கூறினார்.

சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில், காலணி அளவுகள் குறித்த ஆய்வை மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் நேற்று தொடங்கி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com