ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் - ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணை

ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளன.
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் - ஆகஸ்ட் 12ஆம் தேதி விசாரணை
Published on

சென்னை,

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் போயஸ் தோட்டம் அமைந்திருக்கும் 24,000 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி அதற்கான இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது.

தமிழக அரசு இந்த தொகையை சென்னை உயர்நீதிமன்றத்தில் செலுத்தி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசின் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி தீபக் தரப்பிலும், இழப்பீடு நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தீபா தரப்பிலும் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி இதனை இரு நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றம் செய்ய பரிந்துரைத்து உத்தரவிட்டார். இதற்கிடையில் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நிர்வாகியை நியமிக்கக்க் கோரிய வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், அந்த வழக்கும் இதோடு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இந்த வழக்குகள் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்த வழக்குகள் 13வது வழக்காக விசாரணைக்கு வர உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com