தீபாவளி பண்டிகை: அரசு பேருந்துகளில் முன் பதிவு தொடக்கம்

தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
தீபாவளி பண்டிகை: அரசு பேருந்துகளில் முன் பதிவு தொடக்கம்
Published on

சென்னை,

தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ம் வருகிறது. இதையொட்டி வெளியூர்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால், பேருந்துகள்,ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு முடிந்து விட்டது.

மேலும் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரெயில்களை இயக்கவும் தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. ஆனால் சிறப்பு ரெயில்களிலும் முன்பதிவு உடனே முடிந்து விடும் என்பதால் பெரும்பாலானோர் தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்வார்கள்.

சென்னையில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் 1200 பேருந்துகளில் நாள்தோறும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். அவற்றில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.

அதன்படி அக்டோபர் 25ம் தேதி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு ஆகஸ்ட் 27ம் தேதி (இன்று) முன்பதிவு தொடங்குகிறது. www.tnstc.in மற்றும் 2 தனியார் இணைய தளங்கள் மூலம் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீபாவளி பண்டிகையின்போது எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்குவது என்பது குறித்து அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்களுடன் அடுத்த 2 வாரங்களில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாகவும், அதன்பிறகு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து அறிவிக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நாட்களில் சென்னை, புறநகர் பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் அதனை குறைக்கும் வகையில், திட்டமிட்டு பேருந்துகளை இயக்குவது குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com