முதல்-அமைச்சர் பெயரில் டீப்பேக் மோசடி... 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி!

ராஜஸ்தான் காவல்துறையின் ஒருங்கிணைப்பின் மூலம் 12.9.2026 அன்று சிபிசிஐடி குழுவினர் வெற்றிகரமாக குற்றவாளியை கைது செய்தனர்.
முதல்-அமைச்சர் பெயரில் டீப்பேக் மோசடி... 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிசிஐடி!
Published on: 

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சரை போலச் சித்தரித்து உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) டீப்பேக் (Deep Fake) மோசடி வீடியோ வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.சி.ஐ.டி.

டீப்பேக் வீடியோக்கள் மூலம் மோசடி

இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு முதல்-அமைச்சரை போல சித்தரித்து, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட டீப்பேக் வீடியோக்கள் மூலம் நிதி உதவி கோரி தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை ஏமாற்றியது தொடர்பாக, 01.09.2026 அன்று சி.பி.சி.ஐ.டி சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ராஜஸ்தான் வாலிபர் கைது

இது தொடர்பாக குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்ய, சி.பி.சி.ஐ.டி-யின் சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் உள் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. தீவிர தேடுதல் மற்றும் கைப்பற்றுதல் நடவடிக்கைகளின் மூலம் கைபேசிகள், சிம் கார்டுகள் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட முக்கியமான டிஜிட்டல் சாதனங்கள் மீட்கப்பட்டன. குறிப்பாக, மோசடி வீடியோக்களில் வெளியான எண்களுக்குரிய சிம் கார்டுகளும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மிரட்டிப் பறிக்கப்பட்ட பணத்தை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட யு.பி.ஐ (UPI) ஐடி-யுடன் இணைக்கப்பட்ட சிம் கார்டுகளும் கைப்பற்றப்பட்டன.

விரிவான தொழில்நுட்ப விசாரணை மற்றும் தீவிரமான கண்காணிப்புக்குப் பிறகு, குற்றவாளியை, ராஜஸ்தான் காவல்துறையின் ஒருங்கிணைப்பின் மூலம் 12.9.2026 அன்று சிபிசிஐடி குழுவினர் வெற்றிகரமாகக் கைது செய்தனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல் மற்றும் மோசடி செய்தல் ஆகிய குற்றங்களுக்காக பி.என்.எஸ் (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பொருத்தமான பிரிவுகளின் கீழ், சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள XI-வது பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் 60 நாட்களுக்குள் குற்றம் சாட்டப்பட்ட ராஜஸ்தான் மாநிலம், அல்வார், லச்சம்கரைச் சேர்ந்த ஜகூர் கான் என்பவரின் மகன் சியாபு கான் (28) என்பவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை மின்னணு முறையில் சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X