நாய்கள் கடித்ததில் புள்ளிமான் பரிதாப சாவு: வீட்டிற்குள் புகுந்த மற்றொரு மான் உயிர் தப்பியது

வீட்டின் கதவு திறந்திருந்ததை கண்ட அந்த மான், உள்ளே புகுந்து அங்கிருந்த கழிவறையில் தஞ்சமடைந்தது.
மான்
Published on

கோவை,

கோவை பேரூர் அருகே உள்ள கிராமப்பகுதியில், வெறிநாய்கள் கடித்ததில் புள்ளிமான் ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. நாய்களிடம் இருந்து தப்பிக்க குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, வீட்டின் கழிவறையில் தஞ்சமடைந்த மற்றொரு மான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

வெறிநாய்கள் கூட்டம்

நேற்று அதிகாலை இரண்டு புள்ளிமான்கள் தண்ணீர் மற்றும் உணவு தேடி பேரூர் செட்டிபாளையம் கிராம பகுதிக்குள் நுழைந்துள்ளன. அப்போது, அந்த பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய்கள் கூட்டம், மான்களை கண்டு குரைத்தபடி துரத்தி சென்றன .இதனால் அதிர்ச்சியடைந்த மான்கள், தங்களை காப்பாற்றி கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடின.

புள்ளிமான் இறந்தது

எனினும், ஒரு மானை விடாமல் துரத்திய நாய்க்கூட்டம், அதனை சூழ்ந்து கொண்டு உடலின் பல்வேறு இடங்களில் கொடூரமாக கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த அந்த புள்ளிமான், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தது.

வீட்டில் தஞ்சமடைந்த மான்

இதற்கிடையே, நாய்களிடம் இருந்து தப்பிய மற்றொரு மான், அந்த பகுதியில் இருந்த ஒரு குடியிருப்பு பகுதிக்குள் அஞ்சியபடி ஓடியது. அங்கிருந்த ஒரு வீட்டின் கதவு திறந்திருந்ததை கண்ட அந்த மான், உள்ளே புகுந்து அங்கிருந்த கழிவறையில் தஞ்சமடைந்தது. வீட்டிற்குள் மான் புகுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக கழிவறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு, பேரூர் போலீசாருக்கும், போளுவாம்பட்டி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

வனத்துறை மீட்பு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், உயிரிழந்த மானின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டின் கழிவறையில் பத்திரமாக அடைக்கப்பட்டிருந்த மற்றொரு மானை லாவகமாக பிடித்து மீட்டனர். மீட்கப்பட்ட அந்த மானுக்கு லேசான காயங்கள் இருந்ததால், அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அந்த மான் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டு பத்திரமாக விடுவிக்கப்பட்டது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com