தளி சட்டமன்ற உறுப்பினர் தி.ராமச்சந்திரன் மீது அவதூறு: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்


தளி சட்டமன்ற உறுப்பினர் தி.ராமச்சந்திரன் மீது அவதூறு: இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்
x

தளி சட்டமன்ற உறுப்பினர் தி.ராமச்சந்திரன் மீது அவதூறு செய்தி பரப்புவோர் மீது இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், தளி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான தி.ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வர்க்க- வெகு மக்கள் அமைப்புகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரட்டப்பட்டு, அவர்களது அடிப்படை உரிமைகளுக்கும், கோரிக்கைகளுக்குமான போராட்டங்களை முன்னெடுத்து, முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். சட்டப் பேரவையில் தொகுதி மக்களின் உணர்வுகளை பிரதிபலித்து வருகிறார். கம்யூனிஸ்டு கட்சியின் வளர்ச்சியினையும், தி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. செல்வாக்கும் உயர்ந்து வருவதை சகித்துக் கொள்ள முடியாத சுயநல சக்திகள், அவர் மீது அவதூறு பரப்பி வருகின்றன.

குறிப்பாக வேடியப்பன் என்பவர் “செங்களம்” யூடியூப் சேனலுக்கு கடந்த 20.9.2025 அன்று அளித்த நேர்காணலில், சூளகிரி காவல் சரக எல்லைக்குள் கடந்த 17.9.2025 அன்று நடந்த கொலை சம்பவத்தை காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில், அந்த சம்பவத்தில் தளி சட்டமன்ற உறுப்பினரை தொடர்புபடுத்தி, அடிப்படையற்ற அவதூறு செய்தியை வலிந்து கூறியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவரை சந்திக்க வந்த கிராம மக்கள் எடுத்துக் கொண்ட நிழற்படத்தை தவறாக சித்தரிக்க பயன்படுத்தியுள்ளார்.

மக்கள் பிரதிநிதி என்கிற முறையில் சட்டமன்ற உறுப்பினரை சந்திக்க வருபவர்களின் உண்மை தன்மை அறிந்து கொள்ள இயலாது என்ற எளிய உண்மையை எவரும் மறுக்க இயலாது. இதனை ஆதாரமாகக் காட்டி பரபரப்பு செய்தியாக வெளியிட ஒரு வார பத்திரிகை அட்டைப்படம் வெளியிட்டிருப்பது வேதனையளிக்கிறது.

பொதுமக்களின் நன் மதிப்பையும், ஆதரவையும் பெற்றுள்ள தி.ராமச்சந்திரன் மீது அவதூறு பரப்புவதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இது போன்ற அவதூறு செய்தி பரப்புவோர் மீது இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எச்சரிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story