அண்ணாமலை மீது அவதூறு வழக்கு: சைதாப்பேட்டை கோர்ட்டில் டி.ஆர்.பாலு வாக்குமூலம் தாக்கல்

பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி அண்ணாமலை மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகி டி.ஆர்.பாலு பிரமாண வாக்குமூலம் அளித்தார்.
அண்ணாமலை மீது அவதூறு வழக்கு: சைதாப்பேட்டை கோர்ட்டில் டி.ஆர்.பாலு வாக்குமூலம் தாக்கல்
Published on

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தி.மு.க. பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியல் என்று ஒன்றை வெளியிட்டு புகார் தெரிவித்தார். இதில் தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவரும், தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலு மீதும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த சொத்துப்பட்டியல் அவதூறாக வெளியிடப்பட்டு இருப்பதாக கூறி தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து அண்ணாமலைக்கு நோட்டீசுகள் அனுப்பப்பட்டன. ஆனால், தான் தெரிவித்த குற்றச்சாட்டை மறுக்க முடியாது என்றும், வழக்கை எதிர்கொள்ளத் தயார் என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், தி.மு.க.நாடாளுமன்ற குழு தலைவரும், தி.மு.க. பொருளாளருமான டி.ஆர்.பாலு அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17-வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 1957-ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறேன். எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். கட்சியிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வரும் எனக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயரும் மரியாதையும் உள்ளது. அதை களங்கப்படுத்தும் விதமாக அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எனக்கு எதிராக சுமத்தியுள்ளார்.

எங்கள் குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அவர் கூறும் நிறுவனங்களில் 3 நிறுவனங்களில் மட்டும் சிறு முதலீடு செய்து உள்ளேன். மற்ற நிறுவனங்களில் பங்குதாரராகவும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டை கூறி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுதவிர அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு அனிதா ஆனந்த் முன் வந்தது. அப்போது தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு ஆஜராகி பிரமாண வாக்குமூலம் அளித்தார். அப்போது அவருடன் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க. எம்.பி. வக்கீல் வில்சன் ஆகியோர் வந்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com