அவதூறு வழக்கு: நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு - இன்று விசாரணை

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நடிகை மீரா மிதுனின் ஜாமீன் இன்று விசாரணைக்கு வருகிறது.
அவதூறு வழக்கு: நடிகை மீரா மிதுன் ஜாமீன் மனு - இன்று விசாரணை
Published on

சென்னை,

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது மீரா மிதுன் கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்த சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு, அவரை கைது செய்து ஆஜர்படுத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மீராமிதுன் தரப்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர் ஆஜராகி வாதாடினார்.

ஜாமீன் கோரிய மனு விசாரணைக்கு பட்டியலிடப்படாத நிலையில், மீரா மிதுனை அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நடிகை மீரா மிதுனின் ஜாமீன் மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன், இன்று விசாரணைக்கு வர உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com