அவதூறு வழக்கு: டிராபிக் ராமசாமிக்கு பிடிவாரண்டு - சென்னை கோர்ட்டு உத்தரவு

அவதூறு வழக்கில் டிராபிக் ராமசாமிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து சென்னை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்கு: டிராபிக் ராமசாமிக்கு பிடிவாரண்டு - சென்னை கோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை, காஞ்சீபுரம் மாவட்டங்களில் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பிலும், தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. வெளிமாநிலங்களில் இருந்து வந்த நிவாரண பொருட்களை அ.தி.மு.க.வினர் பறிப்பதாக கூறி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி பேசிய வீடியோ வாட்ஸ்-அப்பில் வெளியானது.

இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக கூறி டிராபிக் ராமசாமிக்கு எதிராக மாநகர குற்றவியல் அரசு வக்கீல் சென்னையில் உள்ள மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் 2016-ம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே டிராபிக் ராமசாமிக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்திருந்தது.

இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிராபிக் ராமசாமிக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து நீண்டநாட்கள் ஆகிவிட்டதால், புதிதாக வாரண்டு பிறப்பிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, டிராபிக் ராமசாமிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி மீண்டும் உத்தரவிட்டார். பின்னர், வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 17-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com