தமிழர்கள் மீது அவதூறு: மத்திய இணை மந்திரி மீது மதுரையில் வழக்குப்பதிவு

தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று மத்திய மந்திரி ஷோபா தெரிவித்த கருத்தால் சர்ச்சை எழுந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மதுரை,

பெங்களூரு நசரத்பேட்டையில் ஒரு கடையில் அனுமன் பஜனை பாடல் விஷயத்தில் கடையின் உரிமையாளரை சிலர் தாக்கினர். இந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜனதா சார்பில் நேற்று அந்த பகுதியில் போராட்டம் நடந்தது. இதில் மத்திய இணை மந்திரி ஷோபா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷோபா, "பெங்களூரு விதான சவுதாவில் சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிடுகிறார்கள். அவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று அங்கிருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள். அவர்கள் மீதும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

கேரளாவில் இருந்து வந்து கர்நாடகத்தில் கல்லூரி மாணவிகள் மீது திராவகம் வீசுகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது அனுமன் பஜனை பாடலை ஒலிபரப்பிய கடையின் உரிமையாளரை தாக்கியுள்ளனர். இந்த அரசு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. ஓட்டு அரசியலை மனதில் கொண்டு காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது" என்று அவர் தெரிவித்திருந்தார். அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியநிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இரு தரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக மத்திய இணை மந்திரி ஷோபா மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மனுவில், "மத்திய இணை மந்திரி ஷோபாவின் பேச்சு கர்நாடக மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் இடையே பகை மற்றும் வெறுப்புணர்வை வளர்க்க முயற்சிக்கிறது. தமிழ்நாட்டு மக்களை தீவிரவாதிகள் என்று பொதுமைப்படுத்தி தமிழர்கள் மற்றும் கன்னடம் பேசும் மக்கள் என இரு சமூகத்தினரிடையே குழப்பத்தை உருவாக்க முயல்கிறது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் வெறுப்புணர்வை தமிழ் சமூகத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் சாத்தியம் உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து ஷோபா மீது 153, 153(A), 505(1)(B), 505(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com