அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. புகார்; மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு, த.வெ.க. பொதுச்செயலாளர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சரான ஆனந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அவதூறு பேச்சு:  உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. புகார்; மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. புகார் மனு அளித்துள்ளது.

தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் த.வெ.க. அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியும், மேகதாது அணை கட்டுவதை தடுக்க தவறிய த.வெ.க. அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர், காவிரி டெல்டாவில் உள்ள ஆறுகள் அனைத்தும் இன்றைக்கு வறண்டு, கிட்டத்தட்ட ஒரு பாலைவனம்போல் காட்சி அளித்துக்கொண்டு இருக்கிறது. இதே நேரத்தில் நம்முடைய தலைவர் முதல்-அமைச்சராக இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? நம் தலைவர் இந்த நிலைமை ஏற்பட விட்டிருப்பாரா?.

விவசாயிகள் தவிப்பு

இன்றைக்கு குறுவையை காப்பாற்ற முடியவில்லை. சம்பா என்ன நிலைமை ஆகும் என்று விவசாயிகள் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இது ஏதோ ஒரு சாதாரணமாக நடக்கின்ற விஷயம் கிடையாது. இன்றைக்கு இருக்கக்கூடிய ஒரு நிர்வாக திறனற்ற முதல்-அமைச்சரால் தான் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த காங்கிரஸ் ஆதரவு தேவை. அதனால்தான் கர்நாடக காங்கிரஸ் அரசை கேள்வி கேட்கவே முதல்-அமைச்சர் விஜய் பயப்படுகிறார். மத்திய அரசை பகைத்துக்கொண்டால் பிரச்சினை வந்துவிடும் என இதுவரைக்கும் அவர் வாயில் இருந்து பா.ஜ.க. என ஒரு வார்த்தை வந்ததே கிடையாது. அவ்வளவு பெரிய தைரியசாலி என்று பேசினார்.

அமைச்சர் கண்டனம்

தொடர்ந்து அவர், முதல்-அமைச்சர் விஜய் பற்றி அவதூறாக சில விசயங்களை பேசியுள்ளார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. அவருடைய இந்த பேச்சுக்கு, த.வெ.க. பொதுச்செயலாளர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சரான ஆனந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் தந்தையும் வகித்தும் கூடவா முதல்-அமைச்சர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.

அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணை முதல்-அமைச்சராக இருந்திருக்க முடியும்? மக்கள் மத்தியில் இத்தகைய கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாக பேசியவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்?

எச்சரிக்கை

அமைதி காக்க சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களை தடுக்கிறது. மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி தமிழ்நாடு முதல்-அமைச்சர் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

த.வெ.க. புகார்

இந்த நிலையில், தஞ்சையில் அவதூறாக பேசினார் என உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தேசிய மகளிர் ஆணையத்தில் த.வெ.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பழ. செல்வ குமார் தேசிய மகளிர் ஆணைய தலைவருக்கு புகார் மனு அனுப்பினார். அதில், உதயநிதியின் பேச்சு, காணொளியை அடிப்படையாக கொண்டு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

உதயநிதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் த.வெ.க. மகளிர் அணி நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com