

சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், அடையாறைச் சேர்ந்த எஸ்.சேவியர் பிரிட்டோ என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பிரபல நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தலைவருமான ஜோசப் விஜய், என் மனைவி வழியில் உறவினர். பிரபல யூடியூபர் மாரிதாஸ், என்னை பற்றி உண்மைக்கு புறம்பான பல கருத்து களை தெரிவித்து வருகிறார். என்னை பற்றி பேச மாரிதாசுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.ஸ்ரீதர், மனுதாரர் தனது துறை சார்ந்து மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், அவருக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகிறது. இப்போதெல்லாம் ஒரு கேமரா, இணையதள இணைப்பு இருந்தால், யூடியூப் சேனல் என்ற பெயரில் தங்களுக்கு தோன்றுவதை எல்லாம் பேசுகின்றனர். அந்த விடியோக்களின் பின்னூட்டத்தில் தரக்குறைவான கமெண்டுகள் பதிவு செய்யப்படுகின்றன. மனுதாரர் நடிகர் விஜய்யின் மாமா என்ற ஒரே காரணத்துக்காக அவதூறு பரப்பப்படுகிறது. எனவே, அவதூறு வீடியோவை அகற்ற உத்தரவிட வேண்டும்' என்று வாதிட்டார்.
மாரிதாஸ் தரப்பில், தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவிக்க அவகாசம் வழங்கி விசாரணையை தள்ளிவைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைத்தார்.