

திருச்செந்தூர்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் கோவில் கிழக்கு பகுதியில் கிரிபிரகாரத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது.
அப்புறப்படுத்தப்பட்டது
பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கோவிலில் தேங்கிய மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் சுவாமி மூலவர் இருக்கும் மகாமண்டபத்திற்குள் மழைநீர் செல்லவில்லை.
அதே நேரம் நாழிக்கிணறு கார் நிறுத்தும் இடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால், மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சாமி தரிசனம்
கார் நிறுத்தம் பகுதி உள்பட கோவிலை சுற்றிலும் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்தது. இதனால் சிறிது நேரத்தில் மழைநீர் முழுமையாக வடிந்தது.
இதன் காரணமாக இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, நேற்று காலை வழக்கம்போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் பகுதியில் வியாபாரமும் வழக்கம்போல் நடந்தது.