

சென்னை,
ஹலோ எப்.எம். வானொலியில் ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ஸ்பாட் லைட் நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற தமிழர்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கை பயணம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தொகுப்பாளர் ராஜசேகருடன் உரையாடுகிறார்கள்.
அந்த வகையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்ட ஸ்பாட் லைட் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் ஒலிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இந்த ஆட்சி 3 மாதங்களில் கவிழ்ந்து விடும் என்று எதிர்க்கட்சியினரும், மாற்று அணியினரும் கூறிவரும் நிலையில், ஆட்சி ஓராண்டை நிறைவு செய்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் சூழ்ச்சியை முறியடித்து 5 ஆண்டுகால ஆட்சியை பூர்த்தி செய்வோம் என்றும் உறுதிபட கூறியுள்ளார்.
ஆட்சி நிர்வாகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நடத்தி வருவதாகவும், தமிழக மக்களுக்கு ஜெயலலிதா வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் கூறிய செல்லூர் ராஜூ, கட்சி முடிவுகளை ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்தே எடுப்பதாகவும் தெரிவித்தார்.
இதைப்போல மத்திய அரசுடனான இணக்கம், பன்னீர்செல்வத்தின் தர்மயுத்த வெற்றி, சசிகலா ஆதரவு நிலைப்பாடு, பஸ் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கும் சாதுரியமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் பதில் அளித்துள்ளார்.