சீரழிக்கப்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: காப்பாற்றத் துணியுமா அரசு? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அதன் பழைய நிலைக்கு மீட்டெடுக்க சிறப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சீரழிக்கப்படும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: காப்பாற்றத் துணியுமா அரசு? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் இராம்சர் ஈர நிலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள பகுதிகளில் ஒன்றான பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிப்புகளால் மிக மோசமாக சீரழிக்கப்படுவதாகவும், அதைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்திய தலைமைக் கணக்காயர் அலுவலகம் குற்றஞ்சாட்டியுள்ளது. பல பத்தாண்டுகளாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சீரழிக்கப்படுவது குறித்து தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டாலும், அதன் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் எவ்வாறெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், அதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்தும் இந்திய தலைமைக் கணக்காயர் அலுவலகம் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் 2005ம் ஆண்டு செயற்கைக்கோள் வரைபடத்தையும், 2021ம் ஆண்டு செயற்கைக்கோள் வரைபடத்தையும் ஒப்பிட்டு இடைப்பட்ட காலத்தில் சதுப்பு நிலம் எந்த அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது; நீர்த்தேக்கப் பகுதிகளில் எந்த அளவுக்கு சட்டவிரோத கட்டிடங்கள் கட்டி எழுப்பப்பட்டுள்ளன என்பது குறித்தும் தலைமைக் கணக்காயர் அலுவலகம் விரிவாக விளக்கியுள்ளது. கோவிலம்பாக்கம் ஏரியிலும் 2002 & 2021 காலத்தில் மிகப்பெரிய அளவில் ஆக்கிரமிப்புகளும், கட்டுமானப் பணிகளும் செய்யப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிப்புகளால் சீரழிக்கப்படுவதும், மத்திய, மாநில அரசு அமைப்புகளே அதற்கு துணையாக இருந்திருப்பதும் புதிய செய்திகள் அல்ல. இதுதொடர்பாக ஏராளமாக செய்திகள் ஏற்கனவே வெளிவந்திருக்கின்றன. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை கண்டித்தும், அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் அமைப்பும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளன. பல போராட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசும் நானும் கலந்து கொண்டிருக்கிறோம்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சிறப்புகளை ஆவணப்படுத்தி, அதற்கு இராம்சர் ஈரநிலம் என்ற தகுதியை தமிழக அரசு பெற்றுக் கொடுத்திருந்தாலும் கூட, அதன் சிறப்புகளை உணர்ந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க தமிழகத்தை கடந்த சில பத்தாண்டுகளாக ஆட்சி செய்த அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

பள்ளிக்கரணை பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலம் சென்னைக்கு இயற்கை கொடுத்த கொடையாகும். மழை நிறைந்த காலத்தில் அதிக நீரைத் தேக்கி வைத்துக்கொண்டு, கோடை காலத்தில் சீராக வெளிவிடும் திறன் இதற்கு உண்டு. அதுமட்டுமின்றி 350-க்கும் கூடுதலான உயிரினங்களுக்கும், 200-க்கும் கூடுதலான தாவரங்களுக்கும் வாழ்க்கையளிக்கும் பல்லுயிர் வாழ்விடமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் திகழ்கிறது. ஆனால், இந்த அரிய நிலம் தொடர்ந்து சீரழிவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

1956ம் ஆண்டில் அடையாற்றின் உட்புறத்தில் தொடங்கி பக்கிங்காம் கால்வாய் வரையிலும், கிண்டி முதல் சிறுசேரி வரையிலும் 15,000 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ஆக்கிரமிப்புகள் காரணமாக 1,725 ஏக்கராக சுருங்கி விட்டது. அதுமட்டுமின்றி, பொக்கிஷமாக காக்கப் பட வேண்டிய இந்த நிலத்தின் 191 ஏக்கர் குப்பைமேடாக அறிவிக்கப்பட்டு, தினமும் 2000 டன்னுக்கும் கூடுதலான குப்பைகள் கொட்டப்படுகிறது. அதனால், சதுப்பு நிலம் அதன் தன்மையை இழக்கிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இராம்சர் ஈர நிலமாக அறிவிக்கப்பட்ட பிறகு, நடப்பாண்டின் தொடக்கத்தில், 10 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது மட்டுமின்றி, அந்த நிலத்தில் 40 அடி சாலையும் அமைக்கப்பட்டது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகள் காரணமாக அதன் சுற்றுப்பகுதிகளில் மழைநீர் தேங்கத் தொடங்கியதையடுத்து, அதை வெளியேற்றுவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மிகப்பெரிய கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சதுப்புநிலத்தில் செயற்கையாக வடிகால்வாய் அமைத்தால் அது சதுப்பு நிலத்தின் நீர் தேக்கும் தன்மையை கெடுத்து விடும் என்பதால் அத்திட்டத்துக்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இப்படியாக, கடந்த காலங்களில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சீரழிப்பதற்கான நடவடிக்கைகள் மட்டும் தான் மேற்கொள்ளப்பட்டனவே தவிர, இயற்கையின் கொடையான அந்த நிலத்தை பாதுகாக்க தமிழக அரசால் சிறு துரும்பு கூட கிள்ளிப் போடப்படவில்லை. இயற்கை மீதும், சூழலியல் மீதும் அக்கறை கொண்ட நாடுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்திருந்தால், அதை அந்த நாட்டு அரசும், மக்களும் கொண்டாடிக் கொண்டு இருப்பார்கள்; தமிழகத்தில் தான் அந்த நிலம் சீரழிகிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இராம்சர் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை சீரழிவில் இருந்து காக்கும் பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. அதனால், இழந்த நிலங்களை மீட்டெடுத்தல், அதன் பல்லுயிர் வாழும் சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அதன் பழைய நிலைக்கு மீட்டெடுக்க சிறப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com