என்ஜினீயரிங் படிப்பு சீரழிந்ததற்கு ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்பில் 63 சதவீத இடங்கள் காலியாக இருப்பதாகவும், என்ஜினீயரிங் படிப்பு சீரழிந்ததற்கு ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
என்ஜினீயரிங் படிப்பு சீரழிந்ததற்கு ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
Published on

சென்னை,

என்ஜினீயரிங் படிப்பு சீரழிந்ததற்கு ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

ஐந்து கட்டங்களாக நடைபெறும் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் இதுவரை மூன்று கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. மூன்று கட்ட கலந்தாய்வின் முடிவில் 36 ஆயிரத்து 126 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் உள்ளிட்ட எந்தக் கல்லூரியிலும் அனைத்து இடங்களும் நிரம்பவில்லை.

மொத்தம் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்ற இந்த கலந்தாய்வில் 71 கல்லூரிகளில் இதுவரை ஒரே ஒரு மாணவர் கூட சேரவில்லை. 214 கல்லூரிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 63 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. இது கடந்த காலங்களில் இல்லாத மிக மோசமான நிலைமை ஆகும்.

தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த மாணவர்களில் பலருக்கு இடம் கிடைக்காத சூழலில், என்ஜினீயரிங் படிப்புக்கான மொத்த இடங்களில் மூன்றில் இரு பங்கு இடங்கள் காலியாக இருக்கக்கூடும் என்றால் பொறியியல் படிப்பு எந்த அளவுக்கு மதிப்பை இழந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். என்ஜினீயரிங் படிப்பு வாழ்க்கைக்கு உதவுவதாக இல்லாமல் ஏட்டுச் சுரைக்காயாக மாறி இருப்பதே இந்த அவலநிலைக்கு காரணமாகும். இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஒரு காலத்தில் லட்சியப் படிப்பாக திகழ்ந்த என்ஜினீயரிங், இப்போது வேறு எந்த படிப்பிலும் சேருவதற்கு இடம் கிடைக்காத சூழலில் ஏதோ படிக்க வேண்டுமே என்பதற்காக படிக்கும் படிப்பாக சீரழிந்து இருப்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். என்ஜினீயரிங் படிப்பு சீரழிந்ததற்கு காலத்திற்கு ஏற்ற வகையில் அப்படிப்புக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படாதது தான் காரணம்.

கடந்த 16 ஆண்டுகளாக தமிழகத்தில் என்ஜினீயரிங் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படவில்லை. அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் துறைகளில் நிமிடத்திற்கு ஒரு மாற்றம் நிகழ்ந்து வரும் நிலையில் அதற்கேற்ற வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். குறிப்பாக என்ஜினீயரிங்கை பொறுத்தவரை, உற்பத்தித் துறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்கூட்டியே யூகித்து, அதற்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அப்போது தான் என்ஜினீயரிங் படிப்புக்கு மரியாதை கிடைக்கும்.

இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்(ஐ.ஐ.டி.), இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி.) மற்றும் சில தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களின் பாடத்திட்டத்துடன் ஒப்பிடும் போது அண்ணா பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் பாடத்திட்டம் மிகவும் தரமற்றதாக உள்ளது.

இந்த நிலையை மாற்றி என்ஜினீயரிங் படிப்பை போட்டி நிறைந்ததாக மாற்றுவதற்காக அதன் பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும். அத்துடன் தொழில் நிறுவனங்களுடன் கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டு மாணவர்களுக்கு குறைந்தது ஒரு பருவத்திற்கு தொழில் பயிற்சி வழங்க வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தில் ஐ.ஐ.டி.க்கு இணையான தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தையும், ஐ.ஐ.எஸ்சி.-க்கு இணையான அறிவியல் கல்வி நிறுவனத்தையும் உலகின் தரமான பேராசிரியர்களைக் கொண்டு தமிழக அரசு உருவாக்க வேண்டும். அவற்றின் வழிகாட்டுதலில் தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளை நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களாக மாற்ற தமிழக அரசு திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com