கால்வாய் சீரமைப்பு பணிகள் தாமதம்:பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல்-முறையீட்டுக்குழு கூட்டத்தில் விவசாயிகள் புகார்

கால்வாய் சீரமைப்பு பணிகள் முடியாததால் பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக முறையீட்டுக்குழு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
கால்வாய் சீரமைப்பு பணிகள் தாமதம்:பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல்-முறையீட்டுக்குழு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
Published on

பொள்ளாச்சி

கால்வாய் சீரமைப்பு பணிகள் முடியாததால் பாசனத்திற்கு தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக முறையீட்டுக்குழு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

முறையீட்டுக்குழு கூட்டம்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:-

ஆழியாறு புதிய ஆயக்கட்டிற்கு உட்பட்ட சேத்துமடை, வேட்டைக்காரன்புதூர், பொள்ளாச்சி, ஆழியாறு பீடர் ஆகிய கால்வாய்களை சீரமைக்கும் பணி ரூ.32 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஒரே ஒப்பந்ததாரரை கொண்டு மேற்கொள்வதால் பணிகளை முழுமையாக முடிக்க முடியவில்லை.

தற்போது மழை பெய்து வருவதால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து உள்ளது. எனவே அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படும் சூழ்நிலையில் கால்வாய் முழுமையாக சீரமைக்காததால் குளம், குட்டைகளுக்கு அந்த உபரிநீரை கொண்டு செல்ல முடியாது. மேலும் பாசனத்திற்கும் தண்ணீரை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படும். எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மின்னகுட்டை சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்த குட்டையை நம்பி கோடங்கிபட்டி, தொண்டாமுத்தூர், பாரமடையூர், பொன்னாண்டகவுண்டனூர் உள்பட 8 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் வறட்சி பாதித்த பகுதியாக உள்ளது. எனவே அந்த குட்டைக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பணை பராமரிப்பு

ஆனைமலையில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை அலுவலக கட்டிடங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. தற்போது தோட்டக்கலைத்துறை அலுவலகம் அருகில் உள்ள அரசு பள்ளிக்கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. ஆனால் வேளாண்மை அலுவலகத்தை இடமாற்றம் செய்யவில்லை. தற்போது மழை பெய்து வருவதால் இடிந்து விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.

ராமபட்டிணம் அருகே சின்னணை, பெரியணை தடுப்பணைகள் உள்ளன. இந்த தடுப்பணைகள் தற்போது நிரம்பி காணப்படுகிறது. எனவே தற்போது தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் தண்ணீர் வீணாக கேரளாவுக்கு சென்று விடும். எனவே வறட்சி காலங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். மேலும் தடுப்பணையை தூர்வாரி ஆழப்படுத்தாமல், அதன் உயரத்தை அதிகரிக்க கூடாது. மேலும் அந்த பகுதியில் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்ட குளம் உள்ளது. அந்த குளத்திற்கு நீர்வரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனைமலை ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசுபடுகிறது. எனவே ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வேளாண்மை துறை அலுவலகம்

கூட்டத்தில் சப்-கலெக்டர் பிரியங்கா பேசும்போது, ஆனைமலையில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தை அருகில் உள்ள பள்ளிக் கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 4 கூட்டங்கள் வரை நடத்தப்பட்டு உள்ளது. தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை இடம்மாற்றிய நிலையில், ஏன் வேளாண்மை துறை அலுவலகத்தை இடமாற்றம் செய்யவில்லை. எனவே வேளாண்மை உதவி இயக்குனரை வரவழைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றியத்திற்கு சொந்தமான சமுதாய கூடத்திற்கு இடமாற்றம் செய்தால் வாடகை கேட்பார்கள். இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com